“சட்டம் – ஒழுங்கு பிரச்சினை இல்லை” – ரஜினி வழக்கு தள்ளுபடி

திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜனவரி மாதம் நடந்த துக்ளக் ஆண்டு விழவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த பேரணி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக அவர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகாரளித்திருந்தார். இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சென்னை எழும்பூர் 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் உமாபதி வழக்கு தொடர்ந்தார். அதில், ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் கமிஷனருக்கும் திருவல்லிக்கேணி காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது வியாசர்பாடியைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆறுமுகம் என்பவர் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

குறுக்கீட்டு மனு தாக்கல் செய்த ஆறுமுகம் தரப்பில் வழக்கறிஞர் நமோ நாராயணன் ஆஜராகி, ‘ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்வதற்கு எந்த முகாந்தரமும் இல்லை. விளம்பரம் தேட மலிவான யுக்தியாக திராவிடர் விடுதலை கழகம் நீதிமன்றத்தை பயன்படுத்துவதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்ற வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இந்த வழக்கு குறித்த தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இன்று ரஜினிக்கு எதிரான இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

“ரஜினியின் பேச்சால் எந்த ஒரு சட்டம் – ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட முடியாது” என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார் அத்துடன் இடையீட்டு மனுவை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

What do you think?

கேரளாவில் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா – தேர்வுகள் ரத்து

மோடி, ஜோதிராதித்ய சிந்தியா இணைப்பிற்கு பாலமாக செயல்பட்டவர் இவரா?