இடஒதுக்கீடு தொடர்பாக நாடுதழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு..!

இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5-ந் தேதி, மாநில அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல், அரசு காலி பணியிடங்களை நிரப்ப முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு உத்தரவை ரத்து செய்ததுடன் குறிப்பிட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தரகாண்ட் அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், “பதவி உயர்வில் இடஒதுக்கீடு கேட்பதற்கு எந்தவொரு தனி நபருக்கும் உள்ளார்ந்த எந்த அடிப்படை உரிமையும் இல்லை” என அதிரடி தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து உத்தரகண்ட் பாஜக அரசு திட்டமிட்டு இடஒதுக்கீட்டை சீர்குலைக்க நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்த விவகாரம் மக்களவையிலும் புயலை கிளப்பியது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் இந்த பிரச்சினையை எழுப்பி இடஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் இந்த புகாரை மத்திய அரசு மறுத்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரகண்ட் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற்ம தீர்ப்பளித்துள்ளது. இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். இதனை காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே அரசியலாக்குவதாக அவர் குற்றஞ்சாட்டினார். இந்தநிலையில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. பிப்ரவரி 16-ம் தேதிக்கு முன்னதாக இந்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

ஆயிரத்தை கடந்தது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை !!!

இலங்கை பிரதமர் ராஜபக்சேவிற்கு ரேணிகுண்டாவில் உற்சாக வரவேற்பு..!