February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் தமிழ்நாடு

மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை, சென்னை தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, பாலகிருஷ்ணன், ஏ.கே.மணி, மாவட்டச் செயலாளர் டி.ஆர்.செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன்படி, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு

தீர்மானம் 1:

பாரதிய ஜனதா கட்சி அரசு பதவி ஏற்றதிலிருந்து சமூக நீதி கோட்பாட்டைச் சிதைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இட ஒதுக்கீடு வழங்குவதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறி வருவதை வேத வாக்காகக் கொண்டு செயல்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. அரசு முனைந்துள்ளது.சமூக நீதி தத்துவத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் வகையில், பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் நடத்திய சமூக நீதிப் போராட்டங்களால் விளைந்த இடஒதுக்கீட்டு உரிமைக்கு வேட்டு வைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு வழக்கில் பிப்ரவரி 7 ஆம் தேதி அளித்த தீர்ப்பு இருக்கிறது.அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 16(4), 16(4ஏ), 15 (4) ஆகியவை செயல்படுத்தும் பிரிவுகள் (Enabling Provisions); இப்பிரிவுகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; இவை அடிப்படை உரிமைகள் இல்லை என உச்சநீதிமன்றம் முகேஷ்குமார் (எதிர்) உத்தரகாண்ட் அரசு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஷ்வரராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த இத்தீர்ப்பு, பட்டியல் இன மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரின் உரிமையைப் பறிக்கும் வகையில் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசின் இணைச் செயலாளர்கள் பதவிக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை என்ற ஆணை, மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து பெறப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க மறுப்பு, ‘நீட்’ மற்றும் ‘நெக்ஸ்ட்’ தேர்வை கட்டாயமாக்கி, கிராமப்புற ஏழை பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தைச் சார்ந்தோர் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் தடுப்பு போன்ற நடவடிக்கைகள் பாரதிய ஜனதா கட்சி அரசின் சமூக நீதிக்கு எதிரான போக்குகள் தொடருவதும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் எதிர்காலத்தில் அரசமைப்புச் சட்டம் வழங்கிய பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இன மக்களின் உரிமைகளை முற்றாக பறிகொடுக்கும் நிலைமையை உருவாக்கிவிடும்.

இந்த பேராபத்துகளைத் தடுத்து நிறுத்த, போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று பிப்ரவரி 13 ஆம் தேதி பெரியார் திடலில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் விடுத்துள்ள அறைகூவல் தீர்மானத்தைச் செயல்படுத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும். சமூக நீதிக்கான போராட்டங்களில் எப்போதும் போல மறுமலர்ச்சி தி.மு.க.வின் பங்களிப்பு இருக்கும் என்று இக்கூட்டம் உறுதியளிக்கிறது.

தீர்மானம் 2:

பாரதிய ஜனதா கட்சி அரசு 2019, டிசம்பர் 10 ஆம் நாள் மக்களவையிலும், டிசம்பர் 11 ஆம் நாள் மாநிலங்களவையிலும் 1955 குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றிய சட்ட முன்வடிவுக்கு, 2019 டிசம்பர் 12 ஆம் நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, குடியுரிமைச் சட்டத் திருத்தம் (Citizenship Amendment Act -CAA) நடைமுறைக்கு வந்துள்ளது.

“பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து எவ்வித ஆவணங்களுமின்றி டிசம்பர் 31, 2014க்கு முன்பாக இந்தியாவில் குடியேறியிருக்கும் இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், சமணர்கள், சீக்கியர்கள் ஆகிய மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களைச் சட்ட விரோதக் குடியேறிகளாகக் கருதக்கூடாது. அவர்கள் மீது கடவுச் சீட்டுச் சட்டம், வெளிநாட்டினர் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தால், அவ்வழக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும்” என்று குடியுரிமைச் சட்டத் திருத்தம் கூறுகிறது.

மத அடிப்படையிலும், இன அடிப்படையிலும் பாகுபாடு செய்து குடியுரிமைச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டிருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையைத் தகர்ப்பதாக உள்ளது.பா.ஜ.க. அரசு நிறைவேற்றியிருக்கும் இச்சட்டத் திருத்தத்தில் மதச் சிறுபான்மையினர் என்றோ, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பவர்கள் என்றோ குறிப்பிடப்படவில்லை. இந்தச் சட்டத் திருத்தம் மத அடையாளத்தை மட்டுமே பேசுகிறது.

பாகிஸ்தானில் இந்துக்களைவிட அஹமதியா முஸ்லிம்கள்தான் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் மதச் சிறுபான்மையினர் ஆவர். பர்மிய இராணுவம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது இனப்படுகொலை நடத்தியிருப்பதும், சிங்கள பேரினவாத அரசு ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்திருப்பதும் உலகமே அறிந்ததாகும். இவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டுக் கொண்டுவரப்படும் இச்சட்டத் திருத்தம் “யூதர்களுக்கு இசுரேல் போல”, “இந்துக்களுக்கு இந்தியா” என்பதை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.

அதற்கேற்ப இச்சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டிருக்கும் நிபந்தனைகள், வரம்புகளை எதிர்காலத்தில் மாற்றும் அதிகாரத்தையும் மத்திய அரசிற்கும் அளித்தே இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

“இந்துக்கள் அல்லாதவர்கள், எந்தவொரு உரிமையினையும் சலுகைகளையும் கோராமல், இந்து தேசத்திற்குக் கீழ்படிந்து இந்த நாட்டில் வாழலாம்” என்று ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த குரு கோல்வால்கர் கூறியிருப்பதற்கு ஏற்ப ‘இந்து இந்தியா’வை உருவாக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்.இன் இறுதி நோக்கமாகும். அதனை நோக்கிச் செல்லும் திசையில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் அடுத்த அடிதான் குடியுரிமைச் சட்டத் திருத்தம்.

நாடெங்கும் குடிமக்கள் பதிவேட்டினை (National Register of Citizens-NRC) நடைமுறைப்படுத்தவும், பா.ஜ.க. அரசு அறிவித்து இருப்பதையும் இந்தப் பின்னணியில்தான் பார்க்க முடியும்.மேலும் இதற்காகவே தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Population Register -NPR)ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.நாடெங்கும் அனைத்துத் தரப்பு மக்களும் பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கொந்தளித்துப் போராடி வரும் நிலையில், பா.ஜ.க. அரசு மக்கள் உணர்வுகளை அலட்சியப்படுத்தி வருவது கடும் கண்டனத்துக்கு உரியது.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். மூன்றும் திரிசூலம் போன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் குத்திக் கிழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.எனவேதான், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வங்காள விரிகுடா கடலில் தூக்கி எறிய வேண்டும் என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்கள் அவையில் முழக்கமிட்டார். இச்சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3:

காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரிப் படுகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சகம், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் 2018, அக்டோபர் 1ஆம் தேதி வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறது.

சுற்றுச் சூழல் அனுமதி பெறாமலும், பொதுமக்கள் கருத்துக் கேட்காமலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்றும் பா.ஜ.க. அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை சுமார் 5099 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு 324 கிணறுகளைத் தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் வேதாந்தா குழுமத்திற்கு மட்டும் 274 கிணறுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய பெட்ரோலியத்துறை போட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரத்து செய்யாமல், வேளாண்மைப் பாதுகாப்பு மண்டலம் என்று முதல்வர் கூறுவது மகா மோசடியாகும்.மேலும் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலியம், இரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய இரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் (Petrolium Chemicals & Petrochemical Instrument Region -PCPIRs) அமைப்பதற்கு 2017 ஜூலை 19 ஆம் தேதி தமிழக அரசு குறிப்பு ஆணை (Notification) எண். 29 வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா சென்றிருந்த போது, பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் நியூயார்க்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் தலைவர், தமிழக முதல்வரைச் சந்தித்து ஒப்பந்தத்தை உறுதி செய்திருக்கிறார்.

தமிழக அரசு பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு வெளியிட்ட குறிப்பாணையை ரத்து செய்யாமல், காவிரி காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக ஆக்குவோம் என்று கூறுவது வெற்று அறிவிப்பாகவே மறுமலர்ச்சி தி.மு.க. கருதுகிறது.

காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு உண்மையாகவே இருந்தால், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க 2017 ஜூiலை 19 இல் வெளியிடப்பட்ட குறிப்பாணையையும் இரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4:

மூன்று ஆண்டு கால இழுத்தடிப்புக்குப் பின்னர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட அ.தி.மு.க. அரசு முன்வந்தது. அதிலும் முதல் கட்டமாக 27 மாவட்டங்களில் மட்டும் 2019 டிசம்பர் 9 இல் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்த தமிழக மக்களுக்கு இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாகை சூடிய மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த வெற்றியாளர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது. காலதாமதம் இன்றி உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5:

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் மக்கள் சேவையில் முன்னணியில் உள்ள அரசுத்துறை காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் எல்.ஐ.சி. நிறுவனம் அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு சுமார் 3 இலட்சம் கோடி ரூபாய் வழங்கி இருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது எதிர்கால வாழ்க்கை குறித்து நாட்டு மக்களுக்குக் கவலையையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே மத்திய அரசு எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை முடிவை கைவிட வேண்டும்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வேத் துறை நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. இரயில்வே துறையைத் தனியார் மயமாக்குவது மக்கள் சேவை வணிகமயம் ஆவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த வளர்ச்சி முன்னேற்றத்தையும் பாதிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகளில் நடைபெற்றிருக்கும் ஊழல் முறைகேடுகள் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற ஒரு கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும்போது, டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளை நம்பிக்கையுடன் எழுதுகின்றனர். ஆனால் இதிலும் கையூட்டு, ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பது தமிழக அரசின் நிர்வாக லட்சணத்தை அம்பலமாக்கி இருக்கின்றது.

ஆளும் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் துணையுடன் நடைபெற்றுள்ள டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகள் குறித்து நியாயமான விசாரணை நடத்திட மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் இன்னமும் கொந்தளிப்பு நீடிக்கிறது. பிப்ரவரி 14 ஆம் தேதி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இசுலாமிய இயக்கங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் அணிதிரண்டு அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இசுலாமியப் பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்துசெல்லுமாறு மிரட்டியுள்ளனர்.  அமைதி வழியில் முழக்கங்கள் எழுப்பிய 50 பெண்களை இழுத்துச் சென்று, காவல்துறை வாகனங்களில் ஏற்றியுள்ளனர். இதைக் கண்டித்த இசுலாமிய இயக்கத்தினர் மீது காவல்துறை கண்மூடித்தனமான தடியடி நடத்தியுள்ளது.

பெண்கள், முதியோர் என்றும் பாராமல் போராட்டக்காரர்களை காவல்துறையினர் பூட்ஸ் காலால் எட்டி உதைத்து தரதர என இழுத்துச் செல்லும் காட்சிகளைச் சமூக ஊடகங்களில் கண்டு கொந்தளித்து, நேற்று இரவு தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இசுலாமிய அமைப்பினர் மீதும் காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது.பழைய வண்ணாரப்பேட்டையில் காவல்துறை நடத்திய தடியடியில் படுகாயமுற்று 70 வயது முதியவர் அமீர் உயிரிழந்திருக்கிறார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாதி, சமய வேறுபாடின்றி போராடி வரும் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் தமிழக அரசு காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். ஜனநாயகத்தில் இத்தகைய பாசிசப் போக்கை அனுமதிக்க முடியாது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகம் நாள்தோறும் போராட்டக் களத்தைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சுட்டிக்காட்டுகிறது. ஆகிய தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Related posts

ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயார் பிரதமர் மோடி

Digital Team

மோதலில் ஈடுபட்ட இந்திய, வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை

Digital Team

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து

Digital Team

மனித உரிமை மீறல் – இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை

Digital Team

தத்துவக் கவிஞர் குடியரசுவுக்கு வைகோ மலர்தூவி மரியாதை

Digital Team

இரட்டை கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Digital Team
You cannot copy content of this page
Madhimugam