ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுண்டர்..! பின்னணியில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்..!
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் “ஆம்ஸ்ட்ராங்” வெட்டி படுகொலை (Armstrong Murder Case) செய்யப்பட்டார். அந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது அந்த வழக்கில் இதுவரை 11 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு சம்மந்தமாக பல்வேறு நபர்களிடம் சந்தேகத்தின் பேரில் காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 11 நபர்களையும் 5 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதில், கொலை செய்துவிட்டு ஆயுதங்களை ஓரிடத்தில் பதுக்கி வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதன் பெயரில் மாதவரம் பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் திருவேங்கடம் என்ற நபரை இன்று காலை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது முள்புதர்கள் நிறைந்த அந்த காட்டு பகுதிக்குள் சென்றதும் திருவேங்கடம் போலீசாரை தாக்கிவிட்டு அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து காவலர்களை தாக்க முயற்சித்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.
அதில், திருவேங்கடத்தின் வலது கை தோள்பட்டையிலும், நெஞ்சு பகுதியிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிர் இறந்துள்ளார்.
அதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த திருவேங்கடம் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன்பு ஒருமாத காலம் அவரை நோட்டமிட்டு அவர்கள் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கூட்டாளிகளுக்கு திருவேங்கடம் தகவல் தெரிவித்தும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் திருவெங்கடம் மீது ஏற்கெனவே இரண்டு கொலை வழக்குகள் உட்பட ஐந்து வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவரகளை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அதில் ஒரு ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..