உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி தடைபடாமல் தொடர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.கே. சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துவரும் போர் இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பது மிகவும் கவலை அடைய செய்கிறது. உக்ரைனுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்வி பயில சென்ற இந்திய மாணவர்கள் செய்வதறியாது சிக்கி தவித்துக் கொண்டிருந்த நிலையில், இதுவரை சுமார் 18 ஆயிரம் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மனதிற்கு ஆறுதலை அளித்தாலும், மீதமுள்ள அனைத்து மாணவர்களும் விரைவில் மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் உக்ரைனில் என்றைக்கு நிலைமை சரியாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதே போன்று கல்வியை பாதியில் இருந்த இந்திய மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலை அனைவரிடத்திலும் உள்ளது. இதுபோன்ற இக்கட்டான நிலையில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் அனைவரும் ,அவர்களுடைய கல்வி தடைபடாமல் அவரவர் மாநிலத்தில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மீண்டும் கல்வியைத் தொடரும் வகையில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய பிரதமர் அவர்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய மாணவர்கள் தங்களின் மருத்துவ கனவை எப்படியாவது, நிறைவேற்ற வேண்டும் என்று முடிவெடுத்து வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அதேபோன்று உக்ரைன் போன்ற நாடுகளில் குறைந்த செலவில் மருத்துவக் கல்வி பெற முடிவதாக கருத்து தெரிவிக்கின்றனர். அதிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு தங்கள் சொத்து, நகைகளை விற்று அந்த பணத்தில் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி, படிக்க வைக்கின்றனர் .
மேலும் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு அதில் உள்ள சிக்கல்களுக்கு மத்தியில் மருத்துவ இடம் கிடைக்க பெறாதவர்கள் , அதிக அளவில் வெளி நாடுகளுக்கு சென்று மருத்துவ கனவை நிறைவேற்றிக் கொள்வதாக கூறுகின்றனர்.
எனவே இந்த தருணத்திலாவது மாணவர்களின் மருத்துவ கனவிற்கு தடையாக இருக்கும் நீட் தேர்வை விலக்கிடும் வகையில் கொள்கை முடிவை மேற்கொண்டு, இந்திய மாணவர்கள் நம் நாட்டிலேயே மருத்துவம் பயில தேவையான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்’ என அதில் தெரிவித்துள்ளார்.