நைஜீரியால் பள்ளி சுவர் இடிந்து விபத்து..! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!
வட மத்திய நைஜீரியாவின் பிளாட்டூ மாகாணத்தில் புஸா புஜ்ஜி பகுதியில் செயின்ட்ஸ் அகடாமி என்ற பள்ளி இயங்கி வந்தது. இரண்டு மாடி கட்டடத்தில் இயங்கி வந்த இந்த பள்ளி திடீரென இடிந்து விழுந்தது. இதில் பள்ளி மாணவர்கள் 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தின் போது நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளியில் இருந்த நிலையில், அனைவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். மாணவர்கள் உள்பட ஏறத்தாழ 154 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கிய 132 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நைஜீரியா தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 22 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்த அருகாமை கிராம மக்கள் உடனடியாக திரண்டு மீட்பு பணியில் ஈடுபட்டதால் பலர் எவ்வித உயிர் சேதமும் இன்றி விரைவாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றுப் படுகையின் அருகில் இருந்தது மற்றும் மிக பழமையான கட்டடம் உள்ளிட்டவற்றின் காரணமாக பள்ளி இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என நைஜீரிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இயங்கிக் கொண்டிருந்த பள்ளியில் திடீரென இந்த விபத்து நேர்ந்தது பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..