கோடை சீசனை முன்னிட்டு நாளை நள்ளிரவு 12 மணி முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யபடுவதாக மாவட்ட ஆட்சிதலைவர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து குன்னூர் – பர்லியார் சாலை மற்றும் கோத்தகிரி சாலைகள் ஒரு வழிபாதையாக மாற்றபட்டுள்ளதுடன் பகல் நேரங்களில் உதகையில் கன ரக வாகனங்களுக்கும் தடை விதிக்கபட்டுள்ளது.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்து இதமான காலநிலையில் சுற்றுலாத்தலங்களை கண்டு ரசித்து செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த ஆண்டிற்கான சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இனி வரும் நாட்களில் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதனாலும் உதகையில் போக்குவரத்தை முறைப்படுத்துவது, அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் உதகையில் உள்ள புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரீத் காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர், விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர், உணவு விடுதிகள் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் கோடை சீசன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நாளை நள்ளிரவு 12 மணி முதல் மே மாதம் இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யபட்டது.
அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித்: கோடை சீசன் முடியும் வரை உதகை – குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை மற்றும் உதகை – கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலைகள் ஒரு வழி பாதைகளாக மாற்ற முடிவு செய்யபட்டது. இதனையடுத்து உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கபடும் என்றும், மேட்டுபாளையத்திலிருந்து உதகைக்கு வரும் வாகனங்கள் பர்லியார், குன்னூர் சாலையில் அனுமதிக்கபடும் என்றார்.
மேலும் கன ரக வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை உதகை நகருக்குள் வரவும் தடை விதிக்கபட்டுள்ளதுடன் கோடை சீசனுக்காக காந்தல், ஆவின் மைதானங்களில் பார்க்கிங் வசதி செய்யபட்டு இருப்பதாகவும், அங்கிருந்து சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வர சுற்று பேருந்து சேவை தொடங்கி இருப்பதாக கூறிய அவர் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.