துணை குடியரசு தலைவரான ஜெகதீப் தன்கர் உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அரசியல் சாசன பிரிவான 142 ஆவது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் நீதித்துறை நேரடியாக நாடாளுமன்ற விவகாரங்களில் தலையிட நினைப்பதாகவும் இது ஆபத்தான போக்கு என்று சமீபத்தில் பேசியிருந்தார்.
பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரான நிஷிகாந்த் துபே, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நேரடியான விமர்சனங்களை முன் வைத்தார்.
இதற்கிடையில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வில், வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகி, `வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தில் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. வன்முறையை தடுக்க அந்த மாநில அரசு தவறிவிட்டது. எனவே அந்த மாநிலத்துக்கு உடனடியாக துணை இராணுவ படையை அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும். மேற்கு வங்க மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நான் மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அப்போது பேசிய நீதிபதி, “ஏற்கனவே நாங்கள் அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறோம் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளோம். இஇந்த சூழலில் நாங்கள் குடியரசு தலைவருக்கு இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டதோடு மனுவையும் ஏற்க மறுத்து விட்டார்.
நீதிபதி பி.ஆர் கவாய் தான் அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக மே 14ம் தேதி பதவியேற்கவுள்ளார்.