2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை ரத்து செய்யவோ அல்லது நிறுத்திவைக்கவோ கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2019ம் ஆண்டு பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தியதாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி தீர்ப்பளித்தது.
கர்நாடகாவில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘எல்லா திருடர்களும் மோடியை எப்படி பொதுவான குடும்பப்பெயராக வைத்திருக்கிறார்கள்’ என பேசியதாக குஜராத் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான பூர்ணேஷ் மோடி ராகுல் காந்தி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, மேல்முறையீடு செய்ய காலஅவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
இதனையைடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யவோ அல்லது நிறுத்திவைக்கவோ வேண்டுமென சூரத் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் ஏப்ரல் 13ம் தேதி நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 20ம் தேதி தீர்ப்பை அறிவிப்பதாக சூரத் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைக்ககோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.