தமிழ் நாட்டில் அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்கள் அதிகம் அமர்த்தப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அதில் தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து, பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்ட திருத்தததை தாக்கல் செய்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் இளைஞரை நூறு விழுக்காடு ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.