சூடுபிடித்துள்ள அரசியல் சூழ்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக.29) மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கவிருக்கிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கிறார்கள்.
முக்கியமாக சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை, சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்வது குறித்த அவசர சட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
மேலும் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி, வெள்ளத்தடுப்பு, மழைநீர் வடிகால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர். மற்றும் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.