பள்ளிக்கருணை அருகே பயங்கர விபத்து..! புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி விசாரணை..!
பள்ளிகரணை ரேடியல் சாலையில் இன்று அதிகாலை கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. நாராயணபுரம் ஏரி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற அது ஏரியில் கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்த இருவரும் காருடன் நீரில் மூழ்கினர். இதனை கண்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த பள்ளிகரணை காவல்துறையினர் கிரேன் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் உதவியோடு காரை கரை சேர்த்தனர்.
இதையடுத்து அந்த காரில் இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுசல் என்பவர் மீட்கப்பட்டார். ஆனால் அவர் அப்போதே தலையில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் இருந்தார். கார் ஓட்டுநர் ராஜசேகர் (35), படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜசேகர் தனக்குச் சொந்தமான காரை சிறுசேரியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டி வந்ததும், நேற்றிரவு அந்நிறுவன ஊழியர்களை பல்லாவரத்தில் இறக்கி விட்டுவிட்டு, திரும்பி சிறுசேரி சென்றபோது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
– பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..