சிங்கப்பூர் நாட்டின் 9-வது அதிபராகப் பதவியேற்றார் தமிழரான தர்மன் சண்முகரத்தினம்.
சிங்கப்பூரில் அதிபராக இருந்த ஹலிமா யாக்கோபின் 6 ஆண்டு கால பதவி காலம் செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான பிரசாரம் ஆகஸ்ட் 30ம் தேதியுடன் முடிந்தது. இந்த போட்டியில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம், எங் கோக் சாங், டான் கின் லியான் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், 64 வயதான தமிழரான தருமன் சண்முகரத்தினம் 70.4% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தருமன் சண்முகரத்னம் கடந்த 2001ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோ தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ள அவர், கடந்த 2011,2019ம் ஆண்டுகளில் துணை பிரதமராக பதவி வகித்தார். மேலும் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டு சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் தருமன் பதவி வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.