விஜயை பார்க்க கேரளாவில் இருந்து வந்த சிறுவன்.. கடைசி வரை பார்க்க முடியாத சோகம்..
விஜயை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் நாங்கள் அவனிடம் மாற்றத்தை உணர்ந்தோம். அவரை பார்க்காமல் இருந்திருந்தால், அவனுடைய வாழ்க்கை படிப்பு, சிகிச்சை என்று சராசரியாக இருந்திருக்கும். இந்த நடன திறமை வெளியில் வந்திருக்காது சிறுவனின் பெற்றோர் பேட்டி
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரிஷான். பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தையான இவர், விஜயின் தீவிர ரசிகர் ஆவார். பொதுவாக நடப்பதற்கே சிரமப்படும் ரிஷான், விஜயின் பாட்டை கேட்டாலே நடனமாட ஆரம்பித்துவிடுவாராம்.
விஜயின் பாட்டை கேட்டுதான் தனது வாழ்க்கையில் பெரும்பாலான நாட்களை அவர் கழித்து வந்திருக்கிறாராம். இவ்வாறு இருக்க, கேரள மாநிலத்தில், தி கோட் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, நடிகர் விஜயை சந்திக்க அங்கு, ரிஷான் தனது பெற்றோருடன் சென்றுள்ளார்.
அங்கு, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, விஜயை அவர் பார்த்துள்ளார். பின்னர், விஜயை கட்டிப்பிடித்துவிட்டு, தனது அன்பை ரிஷான் வெளிப்படுத்தினாராம். இந்நிலையில், நடிகர் விஜயை மீண்டும் பார்க்க விரும்பிய ரிஷானை, அவரது பெற்றோர், நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டிற்கே அழைத்து சென்றுள்ளனர். அங்கு, அந்த சிறுவனின் பெற்றோர் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர்கள், தளபதி பாட்டை கேட்டாலே என் மகனால் ஆடாமல் இருக்க முடியாது. பலமுறை, அவன் நடனமாட முயற்சி செய்து, கீழே விழுந்திருக்கிறான். இதனால் தையல் போடும் அளவிற்கு காயங்களும் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், அவன் விஜய் பாடலுக்கு நடனமாடுகிறான்” என்று கூறியுள்ளனர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், “விஜயை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் நாங்கள் அவனிடம் மாற்றத்தை உணர்ந்தோம். அவரை பார்க்காமல் இருந்திருந்தால், அவனுடைய வாழ்க்கை படிப்பு, சிகிச்சை என்று சராசரியாக இருந்திருக்கும். இந்த நடன திறமை வெளியில் வந்திருக்காது.
ஒரு சிறப்பு குழந்தையை எப்படி கவனிக்கிறோமோ அப்படிதான் கவனித்திருப்போம். கம்யூனிகேசனும் குறைவாக தான் இருந்தது . இப்போது நிறைய முன்னேற்றங்கள் இருக்கின்றன.” என்றனர். நீண்ட மணி நேரமாக அவர்கள் விஜயை பார்க்க காத்திருந்தனர். ஆனால் கடைசி வரை, விஜயை பார்க்க முடியாமலே அங்கிருந்து கிளம்பினார்கள்.