அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்த ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்.. பிரேத பரிசோதனையின் மூலம் அம்பலம்..!
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும் ஐந்து மற்றும் இரண்டரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மாத இறுதியில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 7-ம் தேதி விஜயலட்சுமி காலை வீட்டில் குளித்துக் கொண்டிருந்த வெளியே வந்தபோது பிறந்து ஒன்பது நாட்களேயான குழந்தையின் வயிற்றில் கத்திக் குத்து காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 9ஆம் தேதி குழந்தை உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ப்ரதிஷ்டா என்பவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் குழந்தையில் உடலை மீட்டு பிரேத பரிசாதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்யபட்டது தெரிய வந்தது. பின்னர் தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் , குழந்தையின் தந்தை ராஜ்குமார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் மூன்று முறை குழந்தையை குத்திக் கொலை செய்ததாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ராஜ்குமாரை கைது செய்த வியாசர்பாடி போலீசார், விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை தந்தையே கொடுரமாக கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்