அரசு பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்..!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் சில ஆசிரியர்களிடம் அந்த மாணவி கூறியுள்ளார். ஆனால், அவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்தனர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து மாணவியின் பெற்றோர் விரைந்து வந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ஆனந்தகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவி, புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காத பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கமும் மற்ற 10 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு சூழலை ஏற்படுத்தி வருகிறது.
-பவானி கார்த்திக்