பெட்ரோலிய, ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு வெளியிட்ட குறிப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

காவிரி படுகை மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிப்பதில் தமிழக அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு வெளியிட்ட குறிப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரிப் பாசனப் பகுதி மாவட்டஙகளில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கருத்துருவுக்கு முதன்முதலாக எதிர்ப்பு குரல் எழுப்பியவர் நம்மாழ்வார் என தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து மீத்தேன் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி முதன் முதலில் மதிமுக சார்பில் அறிக்கை வெளியிட்டத்தை நினைவுகூர்ந்துள்ள வைகோ, 2012 ஏப்ரல் 30 ஆம் தேதி ஒகேனேக்கலில், மேகேதாட்டுவில் கர்நாடகா அணைக்கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும், காவிரி படுகை மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி விவசாயிகளை திரட்டி மதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஆண்டு ஜூன் 23 இல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துச் செய்யக் கோரியும், காவிரி டெல்டாவை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கக் கோரியும் மரக்காணம் முதல் இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் அணிவகுத்ததாக வைகோ தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் இடையறாத போராட்டங்கள் நடைபெற்றாலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ஓ.என்.ஜி.சி, வேதாந்த குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக அவர் கூறியுள்ளார்.

காவிரிப் படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலம் ஆக்குவோம் என அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி கடலூர், நாகை மாவட்டங்களில் ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க 57 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு குறிப்பு ஆணை வெளியிட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக ஹால்டியா நிறுவனத்தின் தலைவர் புரந்தன்ட் சாட்டர்ஜி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிப்ரவரி 7 ஆம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் வைகோ கூறியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல், மத்திய அரசு தூக்கி எறிந்ததுபோல் முதலமைச்சரின் இந்த அறிவிப்பும் ஆகிவிடக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ள வைகோ, தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றுவது மட்டுமின்றி, அதனை செயல்படுத்திக் காட்டுவதிலும் தமிழக அரசு முனைப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், காவிரிப் படுகை மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பதில் தமிழக அரசு உண்மையாகவே அக்கறை கொண்டு இருந்தால், பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 2017 ஜூலை 19 இல் வெளியிட்ட அரசின் குறிப்பு ஆணையைத் திரும்ப பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

What do you think?

விஜய், சூர்யாவுடன் மோத காத்திருக்கும் தனுஷ்?

மும்பையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல்..!