புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கடற்கரை மணற்பகுதிகளுக்கு வர பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் இந்தியாவிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க ஒன்றிய மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.அந்தவகையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருதி சென்னையில் டிசம்பர் 31-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய அனைத்து கடற்கரை மணற்பகுதிகளுக்கும் பொது மக்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.