சென்னை கிண்டியில் அரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து மேம்படுத்த கூடிய நம்ம ஸ்கூல் திட்டத்தை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர், அனைவரின் வசந்த காலமும் பள்ளி காலம் தான் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தினந்தோறும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில், சென்னை கிண்டியில் அரசுப்பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டமான நம்ம ஸ்கூல் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்தார். திட்டத்தை தொடங்கியா பின் அந்த நிகழ்வில் முதல்வர் உரையாற்றுகையில், பள்ளிக்காலம் அனைவரின் வாழ்க்கையின் மறக்க முடியாத காலம் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், பள்ளி பருவத்தில் துள்ளி குதித்த நாட்களை யாராலும் மறக்க முடியாது, நேற்று சந்தித்த நபர்களை கூட எளிதில் மறக்கமுடியும் ஆனால், பள்ளிக்காலத்தில் இருந்த ஆசிரியர்களின் பெயர்களை அவ்வளவு எளிதில் மறக்க இயலாது என்றும் நாம் உயர உதவிய பள்ளிகளுக்கு நாம் உதவுவது தான் நம்ம ஸ்கூல் திட்டம், நம்ம ஸ்கூல் திட்டத்திற்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கியுள்ளதாகவும் பேசினார்.
மேலும் எல்லாவற்றையும் அரசால் மட்டுமே செய்ய முடியாது மக்களும் ஆதரவு தர வேண்டும் என்று கூறினார்.இதனை தொடர்ந்து அந்த விழாவில் அவர் பேசுகையில், அரசு பள்ளியை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் முன்னோடி திட்டம் தான் நம்ம ஸ்கூல் திட்டம், தரமான கல்வி வழங்குவதில் தமிழ்நாடு இந்தியாவில் தற்போது 2ம் மாநிலமாக உள்ளது என்று கூறினார்.