பேருந்தை நிறுத்தாத நடத்துநர்.. பாடம் கற்பித்த பெண்கள்..!
திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா அரசு பேருந்தில் பெண்களை பார்த்ததும் அதிவேகமாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை எச்சரித்த கிராம பெண்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி வழியாக காரைக்குளம் வழித்தடத்தில் (TN67 NO630) எண் கொண்ட அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை காரைக்குளம் நோக்கி சென்ற அரசு பேருந்தை பள்ளிமடம் பேருந்து நிறுத்தத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் நிறுத்த முயன்ற பொழுது பெண்களுக்கு கட்டணம் இல்லை என்பதாலும், சாந்து தட்டு, மண்வெட்டி ஆகிய பொருட்கள் கொண்டு வந்ததாலும் ஓசி பயணத்தில் பொருள்களை ஏற்றி வரக்கூடாது அப்படி பொருட்களோடு ஏற வந்தால் பேருந்து நிற்காது என்றும் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் செய்யுங்கள் என ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அலட்சியமாக கூறி பேருந்தை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஆத்திரம் அடைந்த பெண்கள் அதே பேருந்து காரைக்குளம் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்த பொழுது ஊரணிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் அரசு பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை உங்க வீட்டு சொத்தா போகிறது? ஏன் நிப்பாட்டாம போறீங்க என வெளுத்து வாங்கி கண்டிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில்,
விலையில்லா அரசு பேருந்து மட்டும் நிற்பதில்லை அவர்கள்தான் இப்படி பேசுகிறார்கள். ஆனால் காசு கொடுத்து செல்லும் பேருந்துகள் அனைத்தும் நின்று தான் செல்கின்றன அவர்கள் எதுவுமே கூறுவதில்லை. நாங்கள் எதற்காக உங்களுக்கு ஓட்டு போட்டோம் நாங்கள் கூலி வேலை செய்பவர்கள் 100 நாள் வேலைக்கு வந்திருக்கிறோம் இப்படி நிற்காமல் பேருந்து சென்றால் எங்கே செல்வது.
பள்ளி மாணவர்களும் பெண்களும் இந்த பேருந்தில் தான் செல்கின்றனர் இலவச பேருந்து என்பதால் தங்களை அவமதிக்கின்றனர். இந்த வேலைக்கு வந்தால் தான் எங்களுக்கு கூலி கிடைக்கும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பவானி கார்த்திக்