வேலைவாய்ப்புகள் குறித்த வைகோவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்

இந்தியாவில் ஆக்குவோம், திறன் இந்தியா, எண்ணியல் இந்தியா ஆகிய திட்டங்கள் வேலைவாய்ப்பைப் பெருக்கி வருவதாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரின் பதில் கோரி மாநிலங்களவையில் வைகோ சில கேள்விகளை முன்வைத்தார். அதில், கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுமையும் வேலைவாய்ப்புகளை இழந்தவர்கள் எத்தனை பேர்? கடந்த 3 ஆண்டுகளில் கிராமப்புற வேலைவாய்ப்பு இழப்பு எவ்வளவு? திடீரென வேலைவாய்ப்புகளில் வீழ்ச்சி ஏற்பட்டது குறித்து அமைச்சகம் ஆய்வு செய்ததா? நகர்ப்புறங்களில் தகுதியான ஆண்களுக்கும் பெண்களுக்கும் மற்றும் கிராமப்புறங்களிலும் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன? ஆகிய கேள்விகளுக்கு வைகோ விளக்கம் கோரியிருந்தார்.

இதற்கு தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்புத்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், தொழில்தரவு நிறுவனம் 2016 ஏப்ரல் மாதம் சீரமைக்கப்பட்ட காலாண்டுக்கான வேலைவாய்ப்புக் கணக்குப் பதிவைத் தொடங்கியதாக கூறியுள்ளார். அடுத்தடுத்த காலாண்டுகளில் வேலைவாய்ப்புகளில் ஏற்படுகின்ற மாற்றங்களைப் பதிவு செய்வதே அதன் குறிக்கோள் என அவர் விளக்கம் அளித்துள்ளார். வேளாண்மை சாராத தொழில்துறை பொருளாதாரம் என்பது 8 பெரிய வணிகப்பகுதிகள் ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாக்கம், கட்டுமானம், வணிகம், போக்குவரத்து, கல்வி, மக்கள் நல்வாழ்வு, விடுதிகள் உணவகங்கள் மற்றும் கணினித்துறைகளில், பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் இந்தப் பிரிவில் இடம் பெறுகின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட துறைகள் வாரியாக 2016 ஏப்ரல் முதல் 2017 அக்டோபர் வரை, பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அதற்குத் தகுதியான திறமையாளர்களைப் பயிற்றுவிப்பது, ஆகிய இரண்டும் அரசின் முன்னுரிமைப் பணிகள் ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளதாக அமைச்சர் கங்வார் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் துறைகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகின்றது; முதலீடுகள் மற்றும் பொதுச் செலவினங்களைக் கூட்டுவதற்கான பல்வேறு விரைவுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதும் அவரது விளக்கமாக இருக்கிறது.

குறிப்பாக பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் முயற்சிகளின் கீழ் நுண், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தீன்தயாள் உபாத்யாயா கிராமத் திட்டம் ஆகியவை ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். தீன்தயாள் கிராம வாழ்க்கை வசதிகள் மேம்பாடு சிறப்புத் திட்டம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் ஆக்குவோம், திறன் இந்தியா, எண்ணியல் இந்தியா ஆகிய திட்டங்கள் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தத் திட்டங்கள் வேலைவாய்ப்பைப் பெருக்கி வருவதாகவும் அதற்காக, முத்ரா மற்றும் Start up ஆகிய புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தேசிய என்ற புதிய இணையதளத்தை அரசு தொடங்கி இருப்பதாகவும், இதன் வழியாக, இந்தியா முழுமையும் உள்ள வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். திறமைக்கு ஏற்ற பொருத்தமான வேலையைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு இந்தத் தளம் ஒரு தகவல் களஞ்சியமாக வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் விளக்கம் அளித்துள்ளார்.

What do you think?

கொரோனா வைரஸ் உயிரிழப்பு 1,110 ஆக அதிகரிப்பு!

கிரண்பேடி ஆளுநராக இருக்க தகுதியற்றவர்; நாராயணசாமி சாடல்!