நீட் தேர்வில் விலக்கு பெறுவதே அரசின் லட்சியம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள கொத்தவால் சாவடியில் புதிய நியாயவிலைக்கடை மற்றும் உடற்பயிற்சி கூடத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உக்ரைனில் இருந்து தமிழ்நாடு வந்த 1456 மாணவர்களுக்கு 20 மனநல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நேற்று(மார்ச்.09) ஒரே நாளில் மட்டும் 753 பேர் தொடர்பு கொண்டதில் 375 மாணவர்களுக்கு நேரடியாக உரையாற்றி உள்ளனர்.
மேலும், போலந்து போன்ற நாடுகளில் படிப்பை தொடர மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர், இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த உள்ளோம். முதலில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே லட்சியம் என்றும் இதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகள், நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.