ஆளுநருக்கு “வீட்டோ” அதிகாரம் கிடையாது…!! உச்சநீதிமன்றம் அதிரடி..!!
தமிழ்நாடு ஆளுநரின் சட்டவிரோத செயல்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றி
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்ட மசோதாக்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு முன் வந்தது.
அதில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும், திருப்பி அனுப்பாமலும், திசை திருப்பும் வகையிலும், அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகள் பலவற்றிற்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்த பதவிப் பிரமாண உறுதிமொழிக்கு முற்றிலும் மாறாகவும், முரணாகவும் நடந்துகொள்வது பற்றியும், அவரது அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும், அவர் தனக்கு இல்லாத அதிகாரங்களைப் பயன்படுத்துவது முறைகேடு, அரசமைப்புச் சட்ட விரோதம், இதற்கு உச்சநீதிமன்றம் நீதி வழங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.
இதனை விசாரணை செய்த உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் ஜஸ்டிஸ் பர்திவாலா, ஜஸ்டிஸ் மகாதேவன் ஆகியோரைக் கொண்ட அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பின்படி, ஆளுநரின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை என்றும் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதமான செயல் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 3 மாதத்துக்குள்ளும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1. ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது
2 சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை செயல்படவிடாமல் தடுக்கும் உரிமை கிடையாது என்று திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளது.
3. தன் இச்சைபோல அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்கக் கூடாது.
4. மற்ற சில அதிகார வாய்ப்புகள் தனி வழக்காகக் கருதப்படும் என்று எழுதப்பட்டுள்ளதாக வந்த ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
5. பஞ்சாப் அரசின் முந்தைய வழக்கிலும் உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு ஏற்கத்தக்க வழிகாட்டியாகும்.
ஆளுநரை, குடியரசுத் தலைவர் நீக்கம் செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்பு அரசியல் தலைவர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
வீட்டோ அதிகாரம் என்றால் என்ன..?
மசோதாவை நிராகரிப்பது, மசோதாவைத் திரும்பப் பெறுவது அல்லது மசோதாவுக்கு தனது ஒப்புதலைத் தடுத்து நிறுத்துவது இந்தியக் குடியரசுத் தலைவரின் பொறுப்பாகும். மசோதா மீது ஜனாதிபதியின் தேர்வு வீட்டோ அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது.