ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியில் லாரியை உரிய நேரத்தில் முறையாக பழுது பார்க்கவில்லை என மெக்கானிக் மற்றும் அவரது நண்பரை வெட்டி கொலை செய்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வாலாஜாப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியில் பாலாஜி என்ற தனியார் லாரி பழுது பார்க்கும் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு திருத்தணி டி.பதூர் கிராமத்தை சேர்ந்த நிர்மல்குமார் என்ற லாரி ஓட்டுநர் தனது லாரியை பழுது பார்ப்பதற்காக கொடுத்துள்ளார். இதையடுத்து, குறித்த நேரத்தில் லாரியை முறையாக பழுது பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில், லாரி ஓட்டுநர் நிர்மல்குமார் கையில் இருந்த கத்தியை எடுத்து சாலையில் ஓட ஓட மெக்கானிக் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரை உடம்பில் பல்வேறு இடங்களில் தாக்கியுள்ளார். இதில் குழந்தைவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிய சரவணனை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்த குழந்தைவேலு வி.சி.மோட்டூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியின் தம்பி என்பதும், இவரது நண்பரான சரவணன் என்பவர் தனலட்சுமி நகரை சேர்ந்த லாரி மோட்டார் மெக்கானிக் என்பதும், இருவரும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிக மது அருந்தி விட்டு நிர்மல்குமாரிடம் ஏற்பட்ட தகராறில் லாரி கண்ணாடியை உடைத்ததும் தெரியவந்தது. அதேபோல், லாரி ஓட்டுநர் நிர்மல்குமார் திருத்தணி பகுதியில் ஏற்கெனவே கொலைமுயற்சி கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையதும் அவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.