“என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள்..” “இனி மக்களுக்காக உழைப்போம்..”
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று காலை அக்கட்சியின் தலைவர் விஜய் கொடியை ஏற்றி வைத்து அறிமுகம் செய்தார்.. இந்நிகழ்ச்சியில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் மற்றும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர்.
இரண்டு சிவப்பு நிறங்களுக்கு, நடுவே மஞ்சள் நிற கொடியில் அதன் நடுவே இரண்டு போர் யானைகளுக்கு , நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிப் பாடலும் வெளியிடப்பட்டது.., இப்பாடலானது 3டி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது..
அதன் பின் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது இந்த நாள் நமக்கு சாதாரண நாள் அல்ல., மிகவும் சந்தோஷமான ஒரு நாள். நமது அரசியல் பயணத்தை தொடங்கி அதன் தொடக்க புள்ளியாக கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டோம்…
அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே குறிப்பிட்ட இந்த ஒரு நாளுக்காக நீங்கள் அனைவரும் காத்திருந்தீர்கள் என்று எனக்கு தெரியும். கட்சி தொடங்கி முதலில் மாநில மாநாடு வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தோம்… ஆனால் சில பல காரணங்களால் தள்ளி கொண்டு போகிறது..
சீக்கிரமே மாநாடு பற்றிய தகவல்களும்.., அறிவிக்கப்படும் அதற்கு முன் நீங்கள் எல்லாருமே கொண்டாடி மகிழ்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று ஏற்றியுள்ளோம்..
“என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களாகிய உங்கள் முன்னாலும் சரி என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் முன்னாலும் சரி கொடியை அறிமுகப்படுத்துவதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன்”.
இதுவரைக்கும் நாம் நமக்காக உழைத்தோம், இனி வரப்போகும் நாட்களில் கட்சி ரீதியாக நம்மை தயார்ப்படுத்தி தமிழகத்திற்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் நாம் உழைக்கப்போகிறோம்.
புயலுக்கு பின் எப்படி அமைதி ஆர்ப்பரிப்பு ஆரவாரம் இருக்குமோ அதேபோல் நம் கட்சியின் கொடிக்கு பின்னாலும் ஒரு வரலாற்று குறிப்பு இருக்கிறது.
நாம் அனைவரும் ஒரு நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என சொன்னேன் அல்லவா அன்றைய நாளில் நம்முடைய கொள்கைகள் என்ன..? நம்முடைய செயல் திட்டங்கள் என்ன..? என சொல்லும்போது அன்றைக்கு இந்த கொடிக்கான விளக்கத்தையும் சொல்கிறேன்.
இதை நான் வெறும் கட்சிக்கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழகத்தின் வருங்கால தலைமுறைக்கான ஒரு வெற்றிக்கான கொடியாகவே பார்க்கிறேன். அதனை உங்கள் உள்ளத்திலும் உங்கள் இல்லத்திலும் நான் சொல்லாமலே ஏற்றி விடுவீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
இருந்தாலும் அதனை முறையாக செயல்படுத்தும் வரை நாம் காத்துக்கொண்டு இருப்போம்… நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்..” என இவ்வாறே தலைவர் விஜய் பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..