முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரை வெட்டிய நபர்.. போலீஸ் வலைவீச்சு..!
கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (32) என்பவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் சவாரிக்குச் சென்றபோது நெய்குப்பி என்ற இடத்தில் ஆயப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபு (33) மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து திடீரென ராஜேஷ் ஆட்டோவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய பிரபுவின் உறவினர்கள் திடீரென ராஜேஸை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் பலத்த காயமடைந்த ராஜேஸை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து போலீசார் விசாரித்ததில் பிரபுவின் மனைவியும், ராஜேசும் நெருக்கமாக பழகியுள்ளனர். இதனால் பிரபுவுக்கும், ராஜேஷுக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக தான் ராஜேஷ் வெட்டப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த சதுரங்கப்பட்டினம் போலீசார் தலைமறைவான பிரபு மற்றும் அதில் தொடர்புடைய உறவினர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்