திருமணம் ஆனதை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த காவலர்.. தாலி கட்டிய அடுத்த நிமிடமே கைது..!
கன்னியாகுமரி மாவட்டம் கிரத்தூர் பகுதியில் பட்டதாரி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஆடிட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கும் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த காவலரான ராஜேஷ் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் ராஜேஷ் தனக்கு பெற்றோர் இல்லை எனவும் சிறு வயது முதலே பாட்டி தான் தன்னை வளர்த்து வந்ததாகவும் இளம்பெண்ணிடம் பொய்யை வாரி வழங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ராஜேஷ் மற்றும் இளம் பெண்ணுக்கு தேவாலயத்தில் அந்த பெண்ணின் பெற்றொர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
அப்போது அந்த திருமணத்தில் ராஜேஷ் சார்பில் 5 நண்பர்கள் மட்டுமே வந்தனர். அதாவது தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று ராஜேஷ் கூறி தனது நண்பர்களை மட்டும் தான் இருகிறார்கள் என கூறியுள்ளார்.
திருமணம் முடிந்த பிறகு ராஜேஷ் உடன் பணிபுரிந்த பெண் காவலர் ஒருவர் உங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று கூறினீர்களே என்று கேட்டார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண் உடனடியாக நித்திரவிளை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடனடியாக ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது.
அதாவது காவலரான ராஜேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளதாகவும் அவர் தற்போது காவலர் குடியிருப்பில் வசித்து வருவதாகவும் கூறினார்.
மேலும் அவர் காவலர் பணியை முதன்முதலில் தொடங்கிய காலக்கட்டத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணின் பெற்றோர்கள் அவருக்கு வேறொரு நபரை திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் அந்த பெண் திருமணமான அன்றிரவே ராஜேஷ்க்கு செல்போனில் அழைப்பு விடுத்து தன்னை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். உடனே ராஜேஷ் அவரை அழைத்து வந்து திருமணம் செய்துள்ளார்.
அந்த பெண் தான் தற்போது காவலர் குடியிருப்பில் வசிக்கும் தனது முதல் மனைவி என கூறி அதிர்ச்சியை கிளப்பினர்.
இதனை கேட்ட அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் ஆத்திரத்தில் அவரை தாக்க முயன்றனர். பின்னர் அவர்களிடம் இருந்து ராஜேஷை மீட்ட போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்