நீட் மூலம் பொதுக்கல்வி முறை சிதைக்கப்பட்டுள்ளது..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு…!!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 5 நாட்களுக்கு பின் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அதில், இதனைத் தொடர்ந்து, ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திட ஒன்றிய அரசின் சார்பில் 1983-ஆம் ஆண்டில் சர்க்காரியா தலைமையிலான ஆணையம்; 2004-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதி பூஞ்ச்சி தலைமையிலான குழு ஆகியவை அமைக்கப்பட்டு, அவற்றின் சார்பில் ஆயிரக்கணக்கிலான பக்கங்களைக் கொண்ட அறிக்கைகள் வழங்கப்பட்டும் இதுநாள் வரையில் எந்தவித மாற்றமுமின்றி, ஏமாற்றமே தொடர்கிறது.
அடுத்தடுத்து மாநிலப் பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமூகநீதி, பொருளாதார ஏற்றத்தாழ்வின்மை, ஒடுக்கப்பட்டோருக்கான வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, மாநில அரசின் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் வண்ணம் இருந்து வந்த நமது கல்விக் கொள்கையினை நீர்த்துப் போகச் செய்து முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் “நீட்” எனும் ஒற்றைத் தேர்வின் வாயிலாக மட்டுமே மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது.
இந்த ‘நீட்’ தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும், பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும்விதமாகவும் உள்ளது. இந்த நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களுடைய மருத்துவக் கனவுகள் சிதைந்து போயிருக்கின்றன. பல மாணவர்களுடைய விலை மதிப்பில்லா உயிர்களை இழந்து நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாகவே, நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களை தொடர்ந்து உருவாக்கி வரும் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளை நோக்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி, பல உலக நாடுகளில் இருந்தும் உயர்தர சிகிச்சை பெற மக்கள் வருகை புரிந்தவண்ணம் இருக்கிறார்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களையும், உயர்தர மருத்துவமனைகளையும், முன்னணி மருத்துவக் கல்வி நிறுவனங்களையும் கொண்டுள்ள தமிழ்நாட்டில், தரமான கல்வி கொடுக்கப் போகிறோம் என்ற பெயரில் நீட் தேர்வு மூலம் பொதுக் கல்வி முறையை சிதைப்பதையே நாம் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இந்த ‘நீட்’ தேர்வால் ஏற்பட்டுள்ள இன்னல்களைக் களையும்விதமாக, இந்த சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேபோல், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு ஒன்றிய அரசால் மாற்றம் செய்யப்பட்டதால், தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் மூலம் மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்க ஒன்றிய அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி மொழியை ஒன்றிய அரசு மறைமுகமாக தமிழ்நாட்டு மாணவர்களின் மீது திணிக்க முற்படுகிறது.
கல்விக் கொள்கையில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலனை மட்டுமே முதன்மையாகக் கருதும் திராவிட மாடல் அரசு, தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் “சமக்ர சிக்ஷா அபியான்” திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க வேண்டிய சுமார் 2,500 கோடி ரூபாயை விடுவிக்காமல் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை வஞ்சித்து வருகிறது.
இவ்வாறு தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிதியை வழங்காதது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவே தனது கடுமையான கண்டனங்களை ஒன்றிய அரசுக்கு தெரிவித்துள்ளது என்பதை இந்த மாமன்றத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எனவே, மொழி, இன, பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளை உறுதிசெய்யும் வண்ணம் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாததாகும் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.