தங்ககோட்டை தோன்றிய ரகசியம்..!!
அருணகிரி
முன்பு நாட்றம்பள்ளி என்று ஒரு தொகுதி இருந்ததே?
சதீஷ்
அதுதான் இப்போது ஜோலார்பேட்டை. நாட்றம்பள்ளி தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற கே.சி.வீரமணி, அமைச்சர் பொறுப்பு வகித்தார். இப்போது திமுக மாவட்டச் செயலாளர் தேவராஜ், ஜோலார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆக இருக்கின்றார்.
அருணகிரி
திருப்பத்தூர் நகர் ஆட்சிப் பகுதியில் எத்தனை வார்டுகள்?
சதீஷ்
36 வார்டுகள் உள்ள. 90 ஆயிரம் வாக்குகள்.
அருணகிரி
சங்கரன்கோவிலில் 30 வார்டுகள் தான், நான் எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த நகரத்தில் எத்தனை வார்டுகள், மக்கள் தொகையைக் கேட்டு, சங்கரன் கோவிலை விடப் பெரிய ஊரா? சின்ன ஊரா? என்பதை அறிந்து கொள்வேன்.
காலையில் செய்தித்தாளில் எந்த நாட்டைப் பற்றிப் படித்தாலும், அந்த நாட்டின் நிலப்பரப்பு எவ்வளவு என்பதை நினைவுகூர்ந்து படிப்பேன் பத்து வயதிலேயே எனக்கு உலக வரைபடம் மனப்பாடம்.
சரி, நாம் செல்லுகின்ற இந்த வழி முழுமையும் பச்சைப்பசேல் என இருக்கின்றதே? என்னென்ன ஆறுகள் ஓடுகின்றன?
சதீஷ்
பெரிய ஆறுகள் எதுவும் இல்லை. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையில், அத்தனைக் குளங்களும் நிரம்பி விட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் நல்ல மழை. அதனால் தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லை. கரும்பு விளைகின்றது ஆனால், இந்த ஆண்டு மழை குறைவு.
அருணகிரி
அதோ தெரிகின்றதே, அததானே ஏலகிரி?
சதீஷ்
ஆமாம். அங்கே மங்கலம் என்ற ஒரு பெரிய கிராமம் இருக்கின்றது. அதற்கு அருகில் தெரிகின்ற நீண்ட மலை தொடர்கள் தான் ஜவ்வாது மலைகள். அங்கே புதூர் நாடு இருக்கின்றது. .
சென்னையில் இருந்து ஏலகிரி 230 கிலோமீட்டர். ஜோலார்பேட்டை திருப்பத்தூருக்கு இடைவெளி ஒன்பது கிலோமீட்டர் தான். இரண்டு ஊர்களுக்கும் இடையே சுமார் 400 பகிர்வு தானியங்கள் ஓடிக்கொண்டு இருந்தன.
அரசு பெண்களுக்கு விடியல் பயணம் அறிவித்த பிறகு தானிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
அருணகிரி
இப்போது தமிழ்நாடு முழுவதும் அவித்த மக்காச்சோளம் கிடைக்கின்றது. அது நல்ல முன்னேற்றம். ஆனால் அது அன்றாடம் ஆகிவிட்டதா அல்லது அவித்து பல நாட்கள் ஆனதா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அவித்த கடலையைப் பல நாள்களாக விற்கின்றார்கள்.
ஏலகிரி மலைவழியில் ஏறத் தொடங்கினோம். இந்த மலையைப் பற்றி நான் முன்பு எழுதிய கட்டுரையைத் தேடிக் கண்டுபிடித்து முகநூலில் மீள்பதிவு செய்தேன். இங்கே உள்ள வளைவுகளுக்கு சங்கத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களைச் சூட்டி இருக்கின்றார்கள்.
தம்பி, பாரா கிளைடிங் அறிமுகம் செய்தார்களே,
அது தொடர்ந்து பறக்கின்றதா?
சதீஷ்
இல்லை அண்ணா. விடுமுறை நாட்களில்தான் பறக்கின்றது. நான் போனது இல்லை.
அருணகிரி
அதிலும் ஒரு முறை பறந்து பாருங்கள். அடுத்து முதல் அயல்நாட்டுப் பயணமாக, உங்கள் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு தாய்லாந்து போய் வாருங்கள். வேறு எங்கும் காணாத ஒரு அறிவிப்பு இங்கே கண்ணில் பட்டது.
இது பாறைகள் சரியும் பகுதி எச்சரிக்கையாகச் செல்லவும் என்று எழுதி இருக்கின்றார்கள். அதிர்ச்சியாக இருந்தது. இடது புறம் பார்த்தால் ஏராளமான பாறைகள் எந்த நேரமும் உருண்டு விழக்கூடிய நிலையில் தான் இருக்கின்றன.
பொதுவாக மலைகளில் தானிகள் ஓடுவது இல்லை. ஆனால் ஏலகிரி மலையில் ஓடுகின்றன. ஏலகிரி மலையில் நிறைய புதிய கட்டடங்கள் கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஒரே மரத்தில் பத்துக்கும் மேற்பட்ட தேன் கூடுகள் உள்ளன மிளகு செடிகள் காணப்படும் ஆனால் தேவை இல்லை விளைவது இல்லை. சிறிய அளவில் சாக்லேட் செய்கின்றார்கள்.
ஸ்டெர்லிங் ரிசார்ட், ஏஜிஎஸ் ஹாலிடே ரிசார்ட் கடந்து ஏ ஆர் தங்கக் கோட்டைக்குப் போய்ச் சேர்ந்தோம்.
சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் கட்டி இருக்கின்றார். அவர் இந்தக் கோட்டையைச் சுற்றிக் காண்பிக்கின்ற காணொளி, சமூக வலைதளங்களில் உலா வருகின்றது. அதைப் பார்த்து இருக்கின்றேன். இவ்வளவு விரைவில் இங்கே வந்து அதைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.
அத்தகைய வாய்ப்புகள் அமைகின்றன, அல்லது நானே அமைத்துக் கொள்கின்றேன்.
ஊர் சுற்றாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால் நான் சோர்ந்து விடுவேன். பயணங்களே எனக்கு மகிழ்ச்சி தருகின்றன.
தங்கக் கோட்டைக்குச் செல்லும் வழியில் தார்ச்சாலை இல்லை. இது புதிய கட்டுமானம் தான். எனவே, இங்கு இன்னமும் முறையான சாலை அமைக்கவில்லை. நாங்கள் காரில் போனதால் பிரச்சினை இல்லை.
சேலம் ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர், ஏலகிரி மலையில் பத்து ஏக்கர் நிலம் வாங்கி இந்தத் தங்கக் கோட்டையைக் கட்டி இருக்கின்றார். ஊட்டி, கொடைக்கானல் இப்படி இடம் கிடைக்காது. தாஜ்மகால் மற்றும் பல கோட்டைகள் போல, இவருக்கு இந்தக் கோட்டை அவரது கனவுத் தோட்டமாக இருக்கின்றது.
உள்ளே சுற்றிப் பார்க்கக் கட்டணம் ரூபாய் 325 அதுவும் பணம் வாங்க மாட்டார்களாம்.
ஜி பே யில் கொடுக்க, இங்கே அலைபேசி இணைப்பு சரியாகக் கிடைப்பது இல்லை. வங்கி அட்டை கேட்கின்றார்கள்.
எங்களுடன் நின்றுகொண்டு இருந்த இரண்டு தம்பிகள், 325 ரூபாய் கட்டணம் என்றதும் அதிர்ச்சி அடைந்து விலகிப் போய்விட்டார்கள். நடுத்தரக் குடும்பங்களுக்கு இந்தக் கட்டணம் ஒரு பெரிய சுமையாக இருக்கின்றது. கட்டணத்தை 200 ரூபாய் ஆக்கினால், அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். கூடுதல் பார்வையாளர்கள் வருவார்கள்.
உள்ளே சென்றோம். பாஞ்சாலங்குறிச்சி கோட்டை போன்ற வடிவில், அதைவிடப் பலமடங்கு பெரியதாக இருக்கின்றது. பிரம்மாண்டமான வேலைப்பாடுகள். வியப்பாக இருந்தது.
இங்கே மொத்தம் 105 அறைகள் உள்ளனவாம். வரவேற்பாளரிடம் கேட்டோம். ஒரு நாளைக்கு இரண்டு பேர் தங்குவதற்கு ரூ 4500 மற்றும் ஜிஎஸ்டி. வெள்ளி சனி ஞாயிறுகளில் கட்டணம் 6500 ரூபாய் என்றார். உயர்தர உணவகம் இருக்கின்றது. அது தனிச் செலவு.
நடுவில் இருக்கின்ற குளத்தில் யாரும் குளிக்கவில்லை. தனியாக வேறு நீச்சல் குளம் இருக்கின்றதா என்பது தெரியவில்லை.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..