11 எம்.எ.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கை முடித்துவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு பதவி ஏற்றதும், பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அதிருப்தியில் இருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்ததால் பெரும்பான்மையை பெற்றார். இதனால் நம்பிக்கை கோரும் தீர்மானமும் வெற்றி பெற்றது.

இதனிடையே, கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுடன் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் இன்று (பிப்-14) விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கையில் வழக்கை முடித்து வைப்பதாக தலைமை நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், சபாநாயகருக்கு உத்தரவிடமுடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

What do you think?

கொரோனா வைரஸ் – நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு

காவலர் தேர்விலும் முறைகேடு?