3.5 பவுன் நகையை பறித்த பெண்.. பேருந்தில் பரபரப்பு..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஐயப்பன். இவர் தனது மனைவி காமாட்சி மற்றும் குழந்தையுடன் காஞ்சி அருகே உள்ள பனஓலைப்பாடி பகுதியில் உள்ள தனது மனைவியின் அண்ணன் இல்ல காதணி விழாவிற்கு அரசு பேருந்தில் செங்கம் புதிய பேருந்து நிலையம் சென்றனர்.
அப்போது காமாட்சியின் பின்னால் இருந்த பெண் கழுத்தில் இருந்த 3.5 பவுன் தங்க சங்கிலியை பறித்து செல்லுவதை கண்ட அருகில் இருந்தவர்கள் கூறியதை அடுத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட பெண் ஓடி தலை மறைவானார்.
அண்ணன் வீட்டு காதணி விழாவிற்காக பக்கத்து வீட்டில் கடன் வாங்கி காமாட்சி அந்த நகையை அணிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செயின் பறிப்பு குறித்து செங்கம் காவல் நிலையத்தில் காமாட்சி புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அதே பேருந்து நிலையத்தில் பேருந்தில் குழந்தை காலில் இருந்த கொலுசு திருட முயன்ற திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள் மூதாட்டியை குழந்தையின் பெற்றோர் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
செங்கம் போலீசார் அந்த மூதாட்டியுடன் வந்தவர்கள் யார், அனைவரும் ஒரே கும்பலை சேர்ந்தவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்