தவறான ஊசி.. பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்
சேலம் மாவட்டம், ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவரின் மகன் கீர்த்திவாசன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 21 ஆம் தேதி சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாதால் சிறுவனின் பெற்றோர் அதே பகுதியில் உள்ள நடுவலூரைச் சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவருக்கு சொந்தமான தனியார் மருந்துக்கடையில் ஊசி போட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து , திடீரென அச்சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது, உடனே பெற்றோர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்தனர்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.பின்னர் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்த நிலையில் சிறுவனின் உடற்கூறாய்வில் தவறான ஊசியால் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்ததுள்ளது.
தவறான ஊசி செலுத்தப்பட்டதன் காரணம் தான் சிறுவன் உயிரிழந்துள்ளதாக உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஆத்தூர் நகர காவல் துறையினர் தனியார் மருந்தக உரிமையாளரான செந்தில்குமாரை நேற்று மாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவறான ஊசி மருந்தால் சிறுவன் உயிரிழந்து , 2 மாதங்களுக்குப் பிறகு மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-பவானிகார்த்திக்