மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிறந்தநாளுக்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்ட முகநூல் பதிவில்,
ஐயா.வைகோ அவர்களது 80வது அகவை தினத்தன்று சந்தித்து எங்களது வாழ்த்துகளை பகிர்ந்து டேவிட் சூல்மென் எழுதிய ‘தமிழ்’ எனும் புகழ்பெற்ற ஆய்வுநூலையும், ‘கவிஞர் மீனாட்சி சுந்தரம் எழுதிய ‘திருநிழலும், மண்ணுயிரும்: எனும் நூலையும், தந்தைப்பெரியாரின் ‘ சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?’ எனும் நூலையும் கையளித்தோம்.
தொடர்ந்து 60 ஆண்டுகளாக தமிழர் உரிமைகளுக்காக இயங்கிவருகின்ற ஆளுமை. எங்களது மாணவப்பருவத்தில் ஈ.ழ அரசியலை கண்டுணரச் செய்தவர். திராவிடர் இயக்க அரசியலை, தமிழ்நாட்டின் தனித்துவம், டில்லி அரசின் வல்லாதிக்கப் போக்கு என பல கூர்மையான வாதங்களை பலவேறு அரங்குகளில் முழங்கியவர். இப்போதும் அந்த குரலை பதிவு செய்பவர். முல்லைப்பெரியாறு உரிமை பாதுகாப்பதற்காக களப்பணியை மேற்கொண்டது முதல் நியூட்ரினோவிற்கான நடைபயணமென்ற அவரது நகர்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்திருக்கிறேன்.
எங்களைப் போன்ற இளம் இயக்கவாதிகளை முன்னிறுத்துவதில் முனைப்பு காட்டியவர். எவ்வகையிலும் அவரது தேர்தல் அரசியலுக்கான பங்களிப்பை நாங்கள் செய்யாத போதும் பல இயக்கங்களுக்கான அரசியல் வேளியை அமைத்து கொடுத்தார். நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியது முதல் பாவலரேறு பெருஞ்சித்தரனார் பேத்தி தோழர்.கயல் சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட சமயத்தில் உடனடியாக பிரதமரிடத்தில் தொடர்பு கொண்டு அவரை மீட்டார். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கான தூக்கு உறுதி செய்யப்படிறதா என்பதை அறிவதற்காக அன்றய அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து உரையாடி தடுக்க முயன்றது முதல் அவர்களுக்காக வழ.ராம்ஜெத்மலானி அவர்களை வழக்காட ஏற்றுக் கொள்ள வைத்து வழக்கு நடத்தி வெற்றியும் பெற்றார்.
நான் வேலூர் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட போது, உரிய சிகிச்சையளிக்காமல், அரசு மருத்துவர் என்னை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டுமென்ற போதும், உறவினர்கள் உட்பட யாரையும் சந்திக்கவிடாமல் தடுத்த சமயத்தில், என்னை சைதை நீதிமன்றம் அழைத்து வருவதை அறிந்து, நேரில் வந்து எனக்கு நேரும் அடக்குமுறைகளை கேட்டறிந்து வெளிக்கொண்டுவந்தார். இச்சமயத்தில் அவர் வருவதை அறிந்த காவல்துறை என்னை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் 4 மணி நேரம் சாலைகளிலேயே நிறுத்தி வைத்தனர். காலதாமதத்தால் அவர் வெளியேறிவிடுவார் என காவல்துறை நீண்ட நேரம் காத்திருந்த போதிலும் 4 மணிநேரம் நீதிமன்ற வாசலில் நின்று என்னை சந்தித்தார். அதன் பின்னரே எனக்கான சிகிச்சைகளுக்கு அரசு இணங்கியது. என்மீதான உபா வழக்கு தொடுக்கப்பட்டு, விடுதலையான பின்னர் சிறப்பு புலனாய்வு விசாரணை, மே17 அமைப்பின் மீதான நெருக்கடி என அடக்குமுறை தொடர்ந்த சமயத்தில் நெருங்கிய நண்பர்கள் முதல் சில அரசியல் தோழமைகள் கூட எங்களை கைகழுவவும், அமைப்பை சிதைக்கவும் முயன்ற சமயத்தில் சமரசமின்றி ஆதரித்து நின்றார். எங்களுக்கு மட்டுமல்ல, நான் அறிந்த பல தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்கும் இயக்கத் தோழர்களுக்கும் எமக்குதவியது போன்ற ஆதரவும் அளித்தவர். இந்த ஆதரவினை தேர்தலுக்காக அறுவடை செய்ய முயன்றதோ, பிரச்சார ஆதரவினை கேட்டதோ கிடையாது. அவரது அரசியல் கூட்டணி குறித்து நேரடியாக அவரிடத்தில் விமர்சனத்தையும், முரண்பாட்டை வெளிப்படுத்தவும் செய்தபோது அதற்கான சுயவிமர்சனத்தோடு அதை ஏற்றுக்கொண்டு, சனநாயக மாண்பு காத்தார். அவரை விமர்சிக்கும் உரிமையைக் கூட அவர் புன்முறுவலோடு ஏற்பார்..
ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் ஒவ்வொரு வரியும் அவர் ஆழமாக உணர்ந்து நிலைப்பாடு எடுத்தார். அமெரிக்கக் கொடியை அவர் தலைமை தாங்கிய போராட்டத்தில் எரித்த போதும், ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்ட போதும் அதை அவர் மறுக்காமல் அந்த போராட்டங்களோடு தம்மை இணைத்துக் கொண்டார். தேர்தல் அரசியலின் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுக்காக இயங்கும் அரசியல் களத்தின் ஆளுமைக்கு எமது அகவை தினவாழ்த்துகளை பகிர்ந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.