“இது மத்திய பட்ஜெட் அல்ல நிதீஷ் நாயுடு பட்ஜெட்” எம்.பி துரைவைகோ விமர்சனம்..!
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு மட்டுமின்றி, நாட்டின் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் என பலரும் புறக்கணிக்க பட்டுள்ளதாக மதிமுக எம்.பி. துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
நடப்பு 2024 -25 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கெற்று விமர்சனம் செய்து வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தில் திருச்சி எம்.பி.துரைவைகோ பட்ஜெட் மீதான விவாதம் குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, “நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 8.8 சதவீத பங்களிப்பும், ஏற்றுமதியில் 10 சதவீதம் பங்களிப்பும் அளித்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் தனது மாநிலமான தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 6 சதவீதம் பங்களிப்பை கொண்டுள்ள தமிழ்நாடு மத்திய அரசின் வரி பங்கீட்டில் 4 சதவீதம் அளவு குறைந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புறநகர் மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மொத்தம் 24,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்து.. ஆனால் அவற்றில், சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்துக்கு நிதி ஏதும் அறிவிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு தொகையாக 63 ஆயிரம் கோடியில், தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியாக இதுவரை 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போன்று மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்கள் குறித்த அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
ஒன்றிய அரசானது தமிழ்நாட்டிற்கு என்று ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்ததில்லை. தமிழ்நாட்டில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை என்ற காரணத்தால் மத்திய அரசு இப்படி பழி வாங்குவது சரியா..?
மேலும், தமிழ்நாட்டின் மையப் பகுதியாக உள்ள திருச்சியில் “மெட்ரோ ரயில் திட்டம்” அமைக்கும் பணி தொடங்க இருந்த நிலையில்., இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு அறிக்கை அளிக்கப்பட்டு திட்டத்தை தொடங்குவது தொடர்பான எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மக்களிடையே வெறுப்பு அரசியலுக்கு தமிழ்நாடு இடம் கொடுக்காததால் ஒன்றிய அரசு இந்த வேலைகளை செய்து வருகிறது.
கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை வழியாக, தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்ற எங்களின் நீண்டநாள் கோரிக்கை குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் இடம்பெறவில்லை. சென்னை மாநகர போக்குவரத்துக்கு நெரிசலை குறைப்பதற்கு முக்கிய தேவையான, தாம்பரம் – செங்கல்பட்டு இடையேயான விரைவு சாலைத் திட்டம் குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மட்டும் புறக்கணிக்கப்படவில்லை. இந்த நாட்டின் விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் நலனும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது
மொத்தத்தில் இந்த பட்ஜெட் இந்த நாட்டின் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான பட்ஜெட் அல்ல. மாறாக, தங்களது கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்துவதன் மூலம் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்கான பட்ஜெட். அதாவது இது ‘நிதீஷ் -நாயுடு பட்ஜெட்’ என்று துரை வைகோ விமர்சித்து பேசினார்.
-லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..