அந்த புனிதப் பாத்திரம் சொல்லாமல் சொன்ன நிகழ்வு இது..? மஹாபெரியவா ஆன்மீக கதை-17
அடியேன் கல்கத்தாவில் பயணிகள் கப்பலில் வரும் என் நண்பரைக் காணத் துறைமுகம் சென்றேன். கப்பல் இரண்டு மணி நேரம் தாமதம் எனத் தெரிந்தது. அவருக்காக காத்திருக்க முடிவு செய்து அந்த சாலையில் இருந்த ஒரு ஹோட்டலின் முன் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அது ஒரு சிறிய ஹோட்டல். வருவோர் போவோர் அதிகம் இருந்த நிலையில் அந்த ஹோட்டல் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
என் பார்வை கல்லாவில் இருந்தவரின் மீது செல்ல, அவர் அமர்ந்து இருந்த இருக்கைக்குப் பின்னால் ஒரு படம் பூக்களாலும், வண்ணக் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு பார்வையை இழுக்கும் வகையில் இருந்தது.. அந்தப் படம் என்னை ஈர்க்க, நான் அருகே சென்று பார்க்க, அது மஹாபெரியவாளின் படம்.
கல்கத்தாவில் 90 சதவிகித இடங்களில் காளி மற்றும் ராம கிருஷண பரமஹம்சர் விவேகானந்தர் படங்களைப் பார்த்த எனக்கு, என் குரு நாதரைக் கண்டவுடன் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம். படத்தைக் காட்டி யார் இவர் என வினவ அந்த நபர் உள்ளம் பூரித்து கண்கள் விரிய “என் தாக்குர்ஜி என் தாக்குர்ஜி” என பரவசப் பட்டார்.
இவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என அடியேன் கேட்க அந்த கேள்விக்கு காத்திருந்தவர் போல நொடியும் தாமதிக்காது மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவராய் பேசத் தொடங்கினார். அவர் உள்ளத்தில் பெருகிய பக்தி – மடை திறந்த வெள்ளம் என வார்த்தைகளாக பெருக்கெடுத்தது. பக்தியில் நனைந்து நனைந்து வந்து விழுந்த குரு நாதரைப் பற்றிய ஒவ்வொரு சொல்லும் தேனாக என் காதில் பாய்ந்தது.
பக்தியில் பொங்கி பொங்கி கொப்பளித்த அவர் உள்ளம் சற்று சம நிலை அடைய, அடியேன் அவர் பேச்சின் இடை இடையே மஹாபெரியவாளைப் பற்றி ஒரிரு வரிகள் சொல்ல, தன் பேச்சை நிறுத்தியவர் கண்களில் வியப்புடன் தாக்குர்ஜி பற்றி தெரிந்தும் என்னிடம் தெரியாதது போல் கேட்டீர்களா என வாய் விட்டு சிரிக்க அந்த சிரிப்பில் கள்ளம் கபடம் இல்லா அவரின் குழந்தை உள்ளம் தெரிந்தது.
அருகே இருந்த பணியாளரிடம் கல்லாவைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, என் கைகளைப் பிடித்து அழைத்து ஒரு இருக்கையில் அமர்த்தினார். இருவரும் மஹாபெரியவாளைப் பற்றி பேசி பேசி களிப்படைய, நேரம் போனதே தெரியவில்லை. கப்பல் வந்துவிட்ட அறிவிப்பு வர அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன்.
என் கைகளை அழுத்திப் பிடித்தவர் உங்களைப் பிரிய ஏனோ மனம் வரவில்லை, இன்று மாலை என் இல்லம் வாருங்கள். தாக்குர்ஜி என் குடும்பத்துக்கு செய்த ஒரு உன்னதமான அதிசயத்தை சொல்லுகிறேன், வருவீர்களா என ஏக்கத்துடன் கேட்க – அவரிடம் , ஐயா அதை விட பெரும் பாக்கியம் என்ன இருக்க முடியும் கட்டாயம் வருகிறேன் என சொல்லி அவர் முகவரியைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றேன்.
அன்று மாலை அவர் இல்லம் சென்றேன். அழகான எளிமையான சிறிய இல்லம். மணம் கமழும் ஒரு சிறு அறையில் மஹா பெரியவாளின் படம். மஹா பெரியவாளின் முன்னிலையில் ஒரு சிறு பெட்டி இருக்க அதிலிருந்து ஒரு பாத்திரத்தை பயபக்தியுடன் வெளியே எடுத்து வைத்தார்.
– வீர பெருமாள் வீர விநாயகம்