கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தாக்குதல் நடத்தியது இந்த பயங்கரவாத தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வெளிநாட்டினர் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர்.
மும்பையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்ந்தது. இந்த தாக்குதலை நடத்திய 9 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதல் நடந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நாடு முழுவதும் 14ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவு தினத்தில் இந்தியாவிற்கு உலக நாடுகள் உறுதுணையாக நிற்கிறது. பயங்கரவாதம் என்பது மனித குலத்திற்கு எதிரானது. மும்பை பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டவர்கள் மற்றும் அதற்கு மேற்பார்வையாக இருந்தவர்களை சட்ட, நீதியின் முன் நிறுத்த வேண்டும், பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்காகவும் நாம் இதை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.