தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்களின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, “அவள்” புதிய திட்டம் மற்றும் மிதிவண்டி பயணத்தை தொடங்கி வைத்து, சிறப்புத் தபால் உறையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் 1973-ஆம் ஆண்டு முதல் பணியாற்றத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்த விழா கொண்டாடப்பட்டது.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் “மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு” நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு நடத்தப்பட்ட கவாத்து. திறன் பயிற்சி, நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
சாகச “மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு” நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவலில் பாதுகாப்பு நகர திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக “அவள்” (AVAL – Avoid Violence through Awareness and Leaming) என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, அதற்கான இலச்சினையை அறிமுகப்படுத்தி, அத்திட்டத்திற்கான காணொலிக் காட்சி மற்றும் விழிப்புணர்வு காட்சியையும் வெளியிட்டார்.
மேலும், தற்காப்பு கலை வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்பட்ட 400 கல்லூரி மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் தற்காப்பு கலை பயிற்சியை செய்து காட்டினர். தொடர்ந்து, மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு சிறப்பு தபால் உறையையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
“அவள்” திட்டத்தின் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தற்காப்பு பயிற்சிகள் அளிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் அணுகுமுறை மற்றும் திறனை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 8.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு அம்ச பயிற்சி மற்றும்
உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தி, காவலில் செயல்படுத்தப்படவுள்ளது.
“அவள்” திட்டம் சென்னை பெருநகர நான்கு அம்ச “அவள்” சிறப்பு திட்டங்கள் குறித்த விவரங்கள்,
1. சென்னை பெருநகரில் உள்ள காவல் சிறார் மன்றங்களை மேம்படுத்துதல்
சென்னை பெருநகரத்தில் உள்ள 112 பெண்கள் & ஆண்கள் சிறார் மன்றங்களுக்கு அவள் திட்டத்தின் கீழ் இணையதள வசதியுடன் கூடிய LED ஸ்மார்ட் டிவி வழங்கப்படும். இதன்மூலம் இணையதளம் வழியாக, தற்போதைய உலக நடப்புகள், கல்வி, விளையாட்டு, தகவல் தொழில் நுட்பம் போன்ற பல்வேறு விவரங்கள் காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர் எளிதில் அறியும் வண்ணம் எடுத்துரைக்கப்படும். இதன் மூலம் 5,452 சிறுமியர் மற்றும் சிறுவர்கள் பயனடைவார்கள்.
II. காவல்துறையினருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்புடைய பிரச்சனைகளில் புலன் விசாரணை திறனை மேம்படுத்திட ஆண்/ பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு புலன்விசாரணையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கும் வழிமுறைகள் மற்றும் அனைத்து நுட்பமான வழக்குகளிலும் தடயங்களை பகுப்பாய்வு செய்தல் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படும். இதன் மூலம் சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் 23.791 காவலர்கள் பயனடைவர்.
III. சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் தொடர்பு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, அவர்களின் உரிமைகள், பாதுகாப்பு. சமுதாயத்தில் பெண்களின் பங்கு. தனித்திறன்கள். வேலைவாய்ப்பு. சட்ட நுணுக்கங்கள் தொடர்பான தகவல்கள் போன்றவை குறித்து ஊடகங்கள். சமூக வலைதளங்கள் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வழிவகை செய்யப்படும். இதன்மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள். பணிபுரியும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயனடைவர்.
IV. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தற்காப்புப் பயிற்சிகள்
பெண்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்கள் என மொத்தம் 50,000 பெண்களுக்கு சிறப்பு பயிற்சியாளர்களைக் கொண்டு தற்காப்புப் பயிற்சி இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்களுக்கு உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் விதமாக இணையதள வசதி அளிக்கக்கூடிய வகையிலான தொலைக்காட்சி பெட்டிகளை இரண்டு காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்களிடம் வழங்கினார்.
பின்னர், “தமிழக காவல் துறையில் பெண்கள்” என்ற தலைப்பில் காணொலிக் காட்சி ஒளிப்பரப்பட்டது. தொடர்ந்து, அதிரடிப்படை பெண் காவலர்களின் பயிற்சி திறன் மற்றும் பெண்களின் தற்காப்புக்கலை செயல்முறை விளக்கம், ஆயுதப்படை பெண்காவலர்கள் சிலம்பம் சுற்றுதல், நீளகர்ணமடித்தல் போன்ற தற்காப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டையொட்டி சுமார் 100 பெண் காவலர்கள் கலந்து கொள்ளும் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான 700 கிலோ மீட்டர் மிதிவண்டி பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.