டி.என்.பி.எஸ்.சி முறைகேடு – கிராம நிர்வாக அலுவலர் கைது!

2016 ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுயம்பு ராஜனை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குரூப் 2 ஏ உள்ளிட்ட தேர்வுகளிலும் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேடுகளுக்கு மூளையாக செயல்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமார், காவலர் சித்தாண்டி, கார்த்திக், பூபதி உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக தேர்வு முறைகேடுகள் தொடர்வது கண்டறியப்பட்டுள்ளது.

இடைத்தரகர் ஜெயக்குமார் ஒரு பதவிக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணம் பெற்று தேர்வர்களை முறைகேடாக தேர்ச்சி பெற வைத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், முறைகேடாக தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களையும் சிபிசிஐடி கைது செய்துவருகிறது. அதன்படி, 2016 ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்று திருவள்ளூர் மாவட்டம் அத்தங்கி காவனூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சுயம்புராஜனை சிபிசிஐடி இன்று (செவ்வாய்கிழமை) கைது செய்துள்ளது. இன்னும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

What do you think?

கேரளாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது – பினராயி விஜயன்

இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ராம்ப்