டி.என்.பி.எஸ்.சி முறைகேடு; மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் அம்பலம்!

டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகளுக்கு மேஜிக் பேனா தயாரித்து கொடுத்த அசோக் குமார், விண்ணப்பதாரர்கள் இல்லாமலேயே டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ, வி.ஏ.ஓ தேர்வுகளில் முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமாருடன் இணைந்து மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அசோக்குமார் என்ற நபரை திங்கட்கிழமை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

முறைகேடு செய்த தேர்வர்களுக்கு மேஜிக் பேனா வாங்கி கொடுத்தது அசோக் குமார் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஜெயக்குமார் சொல்லும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அசோக் குமாரின் அலுவலகத்தில் வைத்து விண்ணப்பதாரார்கள் இல்லாமலேயே விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திருப்பதை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேக்னஸ் கல்சல்டன்சி எனும் பெயரில் அசோக்குமார் நடத்தி வந்த வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் பலரையும் ஜெயக்குமாருக்கு அறிமுகப்படுத்தி தேர்வுகளிலும், வேலை வாங்கி தருவதிலும் பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தமிழக தலைமை செயலகத்தில் நிதி துறையில் பணியாற்றிய தீபக் என்பவருக்கு உதவியாளர் பணிக்கு 8 லட்சம் கமிஷன் பெற்றுக் கொண்டு இடைத்தரகர் ஜெயக்குமார் மூலம் வேலை வாங்கி கொடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசோக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

What do you think?

“CAA போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா”? – நெல்லை முபாரக் கேள்வி

தட்கல் டிக்கெட்டில் முறைகேடு – 60 பேர் கைது