“இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்..” கேப்டன் விஜயகாந்த்..!!
தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் யார் மீதும் அன்பு வைக்க மாட்டாங்க. அப்படி வச்சிட்டா சாகுற வரைக்கும் மாறவே மாட்டாங்க…. அப்படி மக்களோட அன்பு பெற்றவர்தான் கேப்டன் விஜயகாந்த்….
நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி இதுதான் நடிகர் விஜயகாந்தோட இயற்பெயர். நடிப்பதற்காக மதுரையில் இருந்த சென்னை வந்த பிறகு தனது பெயரை விஜயகாந்த் என்று மாற்றிக்கொண்டார்.
சினிமா வாய்ப்பு இவருக்கு ஒன்னும் உடனே கிடைக்கல. பல கட்ட போராட்டங்களுக்கு அப்புறமாக தான் கிடைச்சிச்சி. 1979-ஆம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில வெளியான “இனிக்கும் இளமை” அப்படிங்கிற படம் தான் விஜய்காந்தோட முதல் படம்.
அவரது சினிமா வாழ்க்கையில் “சட்டம் ஒரு இருட்டறை” அப்படிங்கிற படம் தான் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
அதன் பின் தமிழ் சினிமாவோட முன்னணி நடிகரா மாறிய விஜயகாந்த், “புலன் விசாரணை“, “சேதுபதி ஐபிஎஸ்“, “சத்ரியன்“, “கேப்டன் பிரபாகரன்“, “வானத்தைப்போல“, “தவசி“, “ரமணா” “சொக்கத்தங்கம்” அப்படின்னு 150 திரைப்படங்களுக்கும் மேல நடிச்சிருக்காரு. தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்திருப்பவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே..
பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் உடனான இவரது கூட்டணி தமிழ் சினிமாவில மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 1986ஆம் ஆண்டு வெளியான “ஊமைவிழிகள்” என்ற படத்துல, பலரும் நடிக்கத் தயங்கிய காவல்துறை அதிகாரி டி.எஸ்.பி தீனதயாளன் வேடத்தில் திரையில் தோன்றினார் நடிகர் விஜயகாந்த்.
தனது இமேஜ் பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம சற்று வயதான வேடத்தில் இந்த படத்தில் அவர் நடிச்சிருந்தாரு. தொடர்ந்து திரைப்பட கல்லூரியிலிருந்து வந்த தொழில்நுட்ப கலைஞர்களோட சேர்ந்து பணியாற்றி, உழவன் மகன், செந்தூரப் பூவே, காவியத் தலைவன் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்…
நடிகர் விஜயகாந்தோட திரைப்படங்களில் அதிகம் பேசப்படுவது என்னன்னா அவரது சண்டைக்காட்சிகள் தான். பல படங்களில் டூப் போடாமல் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார்..
இவரது சினிமா வாழ்க்கையில் 1984ம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது., என சொல்லலாம். காரணம் அந்த ஆண்டில் மட்டும் அவர் நடித்த 18 திரைப்படங்கள் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.. இவருடைய திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா என்று சொல்லலாம்
1991ஆம் ஆண்டு, ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில வெளியான “கேப்டன் பிரபாகரன்” திரைப்படம் இவருடைய நூறாவது திரைப்படமாகும்., “கேப்டன் பிரபாகரன்” என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்து. வெள்ளிவிழா கொண்டாடியது..
இந்த படத்திற்கு பின்னே அவர் சினிமா துறையிலும் சரி, ரசிகர்கள் மத்தியிலும் சரி கேப்டன் என்று அழைக்கப்பட்டார்..
1993 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில நடிகர் விஜய் நடிப்பில வெளியான செந்தூரப் பாண்டி படத்துல விஜய்க்கு அண்ணனா கௌரவ வேடத்தில தோன்றியிருந்தாரு நடிகர் விஜயகாந்த்.
இதேபோல 1999-ல் வெளியான “பெரியண்ணா” படத்துலயும் நடிகர் சூர்யாவுக்காக கௌரவ வேடத்தில நடிச்சி கொடுத்தாரு, மறுபடியும் சூர்யா நடிப்பில வந்த மாயாவி படத்துலயும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருபார்.
இப்படி நடிப்புல கவனம் செலுத்திட்டு வந்த விஜயகாந்த் 1999-ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவரானாரு. அவர் தலைவரான சமயத்துல நடிகர் சங்கம் பெரும் கடன் சுமையில இருந்தது…
அதற்காக வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கடன்களை அடைத்தார். அதோடு மட்டும் இல்லாம நலிந்த கலைஞர்களுக்கு, உதவி செய்வதற்காக ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.
கேப்டன் விஜயகாந்த் என்று சொன்னாலே எல்லாருக்கும் நினைவிற்கு வருவது “பசி என்று வருபவர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு அனுப்புவது.., உதவி என்று தேடி வருபவர்களுக்கு உதவி செய்வது..” போன்ற நல்ல உள்ளம் கொண்ட ஒரு மனிதர்..
விஜயகாந்த் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்துல ஷூட்டிங் ஸ்பாட்ல சாப்பிட்டு கொண்டிருந்த போது ஹீரோ, ஹீரோயின் சாப்பிட்டு முடிச்சிட்டா உடனே ஷாட் ரெடின்னு கூறி விஜயகாந்தை அழைச்சிருவாங்களாம். இதுனால, இவரும், சாப்பாட்டை பாதியிலேயே நிறுத்திட்டு போயிடுவாராம்.
இந்த சம்பவங்கள் அவருக்கு நெருடலை தந்ததுனால தான் நல்ல நிலைக்கு வந்து இருக்காரு அப்புறமா.., எந்த பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு கொடுக்க ஆரம்பிச்சிருக்காரு. நான் என்ன சாப்பிடறனோ அதே தான் எல்லாரும் சாப்பிடணும்னு சொன்னவரு தான் நம்ப கேப்டன் விஜயகாந்த்.
கடந்த 2019ம் ஆண்டு உலகையே உலுக்கி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்திய ஒரு சம்பவம் என்றால் அது “கொரோனா” அதில் பல லட்சம் பேர் இறந்தார்கள் பலரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.. ஒரு கட்டத்தில் சிகிச்சை அளிக்க இடம் இல்லாமலும் இறந்தவர்களை புதைக்க இடம் இல்லாமல் தவித்த போது “கேப்டன் விஜயகாந்த்” அவர்கள் தாமாக முன் வந்து அவருடைய சொந்த நிலத்தை இறந்தவர்களை புதைக்கவும்.., சொந்த கல்லூரியில் சிகிச்சை பார்த்துக்கொள்ளவும் கொடுத்தார்..
இப்படி சினிமாவுல பல உச்சங்களைத் தொட்ட கேப்டன் விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு, செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாடை நடத்தி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற தன்னோட கட்சியின் பெயரையும் அறிவித்தாரு.
அதன் பின் முழு நேர அரசியலில் இறங்குனாரு விஜயகாந்த். தொடர்ந்து அரசியல்ல எதிர்நீச்சல் போட்டுட்டு வந்த விஜயகாந்த் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சில காலம் வீட்டிலேயே முடங்கி இருந்தாரு.
இந்த ஒரு நிலையில உடல்நிலையில மோசம் ஏற்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் 2023, டிசம்பர் 28ம் தேதி காலமானார்.
கேப்டன் இறந்து விட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்ட உடன் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன் பின் பொதுமக்களோட படை சூழு ஊர்வலமா கேப்டன் விஜயகாந்த் உடல் எடுத்துவரப்பட்டு, கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து நாள்தோறும் கேப்டன் நினைவிடத்திற்கு சென்று ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்..,
இதற்கிடையில் தான் விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி, அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.
இந்நிலையில் டெல்லியில் மே 9ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் கேப்டன் விஜயகாந்திற்கு “பத்ம பூசன் விருது” வழங்கப்பட்டது. இந்த விருதினை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு பிரேமலதா விஜயகாந்த்திடம் வழங்கினார்.
ஒரு மனுஷன் பிரியும் போது தாய் அழுதா அவன் ஒரு நல்ல மகன், அவனோட புள்ளைங்க அழுதா அவன் நல்ல தகப்பன், அவன் கூட பொறந்தவங்க அழுதா அவன் நல்ல சகோதரன், அவன் பிரிவுக்காக நாடே அழுதா அவர் ஒரு நல்ல தலைவன்.. அந்த நல்ல தலைவர் தான் கேப்டன் விஜயகாந்த்…
மறைந்தாலும் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறந்த தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.. ஒரு சிறந்த மனிதரை பற்றி இந்த தொகுப்பை எழுதியதில் மதிமுகம் என்றும் பெருமைக்கொள்ளும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..