குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. போரட்டத்தில் உறவினர்கள்..!
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே வடக்கு மல்லலைச் சேர்ந்த தம்பதியினர் தங்கச்சாமி-தவசித்ரா (26). இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் கடந்த 14ம் தேதி இரண்டாவது பிரசவத்திற்காக திருஉத்திரகோசமங்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவசித்ரா அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்ப சுகாதார மையத்தில் தவசித்ராவுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து பிரசவம் முடிந்த இரண்டு நாட்களுக்கு பிறகு பெரியபட்டிணத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு ஊசியில் மருந்து செலுத்தியதும், தவசித்ராவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து உடனடியாக தவசித்ராவை ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தவசித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சுக பிரசவத்திற்கு பிறகு நலமுடன் வீடு திரும்பிய மனைவியை அவர்களாகவே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென அழைத்து சென்று, தவறான சிகிச்சையும் மருத்துவர்களின் அலட்சியப் போக்கின் காரணமாக தான் தவசித்ரா உயிரிழந்தாக அவரது கணவரும், உறவினர்களும், அந்த பகுதி கிராம மக்களும் நேற்று அரசு மருத்துவக் கல்லூரி முன்பு ராமநாதபுரம் – மதுரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த ராமநாதபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர்களிடம் பேசிய பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இந்தநிலையில் அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இன்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-பவானி கார்த்திக்