லிப்டுக்குள் நேர்ந்த சோகம்..! புளியந்தோப் அடுக்கு மாடி குடியிருப்பு குறித்து வெளியான அடுகடுக்கான குற்றச்சாட்டு..!
சென்னை புளியத்தோப்பு கேபி பார்க்கில் தமிழ்நாடுநகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த குடியிருப்பில் ஜி பிளாக்-ல் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணேசனும் அவரது மனைவி மலரும் அப்பகுதியில் டிபன் சென்டர் ஒன்று நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் கணேசன் வெளியே சென்று வீடு திரும்புவதற்காக ஜி பிளாக்கில் உள்ள பத்தாவது மாடிக்குச் செல்வதற்காக லிப்ட்டில் சென்றிருக்கிறார்.
அப்போது ஆறாவது மாடியில் லிப்ட் சென்று கொண்டிருந்த போது திடிரென பழுதாகி நின்றுள்ளது. எனவே, உடனடியாக வாட்ச்மேன் மற்றும் லிப்ட் ஆப்ரேட்டர் தகவல் தெரிவிக்கபட்டதை தொடர்ந்து மேலே சென்று பார்த்துள்ளார்கள்.
அதற்குள் கணேசன் பதற்றத்தில் கீழே இறங்க முயற்சி செய்துள்ளார். மீட்கும் போது லிப்ட்க்கும் கட்டிடத்திற்கும் நடுவில் இருந்த இடைவேளியில் அவரது கால் சிக்கி தவறி விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேசின் பிரிட்ஜ் போலீசார், கணேசனின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுகாக அனுப்பி வைத்தனர்.
பின்னர் அப்பகுதியில் விசாரித்த போது இந்த லிப்ட் விபத்திற்கு அடுக்குமாடி குடியிருப்பு முறையாக பராமரிக்காமல் இருந்ததே காரணம் என கேபி பார்க் குடியிருப்பில் வாழும் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் இதற்கு முன்பு தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொண்டுதான் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்