வறண்ட பஞ்சாயத்தை பசுமையாக்க சொந்த செலவில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் பலன் தரும் பலவகையிலான மரக்கன்றுகளை நட்டு அசத்தி வரும் நங்கைமொழி ஊராட்சி தலைவர் விஜயராஜ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட நங்கை மொழி பஞ்சாயத்து உள்ளது. பசுமையாக இருந்த இந்த பஞ்சாயத்து போதிய மழையின்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. வறண்ட பஞ்சாயத்தை பசுமையாக்க அப்துல் கலாம், விவேக் போன்று மரங்களை நட்டு எதிர்காலத்தில் நம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியை பசுமையாக்க முடிவு செய்தார். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயராஜ், நங்கை மொழி பஞ்சாயத்துக்குட்பட்ட வேப்பங்காடு, வீரவநல்லூர், ஆனையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 25 லட்சம் மதிப்பில் பலன் தரும் மா, பழா, கொய்யா, நாவல், மற்றும் சப்போட்டா உள்ளிட்ட பழ வகைகளை கொண்ட மரக்கன்றுகளை நட முடிவு செய்தார்.
முதல் கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கான நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஊர் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பஞ்சாயத்து தலைவர் தன் சொந்த செலவில் இந்த நற்பணியை செய்வதை கேள்விப்பட்ட தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் தானாகவே முன்வந்து சில நிதி உதவிகளையும் வழங்கினர். இதனை எடுத்து இன்று சுமார் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. பஞ்சாயத்து தலைவரின் இந்த செயலை ஊர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் முக்கிய பிரமுகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.