Exclusive Today Trending அரசியல் தமிழ்நாடு

“தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை” – வைகோ விமர்சனம்

தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை என்று மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 விழுக்காடாக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும் ஆனால் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 5 விழுக்காடு அளவுக்கு சரிந்துள்ள நிலையில் அதன் தாக்கம் மாநிலத்திலும் இருக்கும் என்பதே உண்மை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டில் ரூ,3 இலட்சத்து 97 ஆயிரத்து 400 கோடியாக இருந்த கடன், நடப்பு ஆண்டில் 4 இலட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக உயர்ந்துவிட்டது என வேதனை தெரிவித்துள்ள வைகோ, தமிழகத்தின் கடன் சுமை 5 இலட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதுதான் இந்த அரசின் சாதனையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்த, சென்னையில் 2000 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்தம் ,20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டும் திட்டம், ,நடைபாதை வாசிகளுக்கு 38 ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் திட்டம் போன்றவை அறிவிப்போடு நின்று விட்ட நிலையில், இந்த வரவு செலவு திட்டத்தில் அறிவித்துள்ள திட்டங்களுக்கும் அதே கதிதான் ஏற்படும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். காவிரி படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலம் என்ற அறிவிப்பு வெறும் கானல் நீர் என்பது நிதிநிலை அறிக்கை மூலம் வெளிப்பட்டு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ள வைகோ, பெட்ரோலியத்துறை அமைச்சகம் மூலம் வேதாந்தா குழுமம் ஓ.என்,ஜி.சி நிறுவனங்களுடன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குப் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்ய அதிமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேளான் தொழிலை பாதுகாக்கவும் ,விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் இந்த நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்கள் இல்லையென சாடியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து திட்டவட்டமான கருத்தை முன்வைக்காமல் ,நீட் தேர்வைத் திணித்தது போல புதிய கல்விக் கொள்கையையும் செயல்படுத்த அதிமுக அரசு முனைந்து இருக்கிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மதுபானம் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் அதிமுக அரசு உயர்த்தி வருகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள வைகோ, 2016 -ல் ஜெயலலிதா முதல்வர் பதவியேற்ற போது டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடப்படும் என்ற அறிவிப்பை அரசு குப்பைக் கூடையில் வீசி எறிந்துவிட்டது என்றும் விமர்சித்துள்ளார்.

கீழடியில் உலகத் தரம் வாய்ந்த அகழ் வைப்பகம், அயலகத் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கண ஆய்வு இருக்கை அமைத்தல், கடலூரில் அரசு மருத்துவக்கல்லூரி போன்ற வரவேற்கதக்க அறிவிப்புகள் தவிர, தமிழக அரசின் வரவு செலவுத்திட்டம் மொத்தத்தில் ஏமாற்றமே அளிக்கிறது என்று தமிழக பட்ஜெட் குறித்து வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு; மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் அம்பலம்!

Digital Team

சம்பிரதாயங்களை மீறிய மஹிந்த ராஜபக்ச!!! – கண்டுகொள்ளாத தேவஸ்தான அதிகாரிகள்

Digital Team

ஆம்புலன்ஸை டிராக் செய்ய புதிய செயலி; ஆனாலும் ஸ்பீடு அதேதான்!

Digital Team

கொரோனா உயிர்பலி எண்ணிக்கை 2,442 ஆக அதிகரிப்பு

Digital Team

தீனதயாள் உபாத்யாய சிலையை திறந்து வைத்தார் மோடி

Digital Team

டிக்-டாக்கில் மனைவியின் வீடியோ; கொலை செய்த கணவன்!

Digital Team
You cannot copy content of this page
Madhimugam