வேளாண் கடன் உச்சவரம்பை உயர்த்துக! – வைகோ கோரிக்கை

வேளாண் கடன் உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரும்பு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடிகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதன் காரணமாக, கரும்பு உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.

கடும் வறட்சி, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு, கட்டுப்படியான கொள்முதல் விலை இல்லாத துயரம் போன்றவற்றால் நாட்டில் கரும்பு உற்பத்தி பரப்பும் குறைந்துகொண்டே வருவது கவலையளிக்கிறது.

கரும்பு விவசாயம்

இதனால் தேசிய அளவில் சர்க்கரை உற்பத்தி பெருமளவில் சரிந்து வருகிறது. 2018-19 நிதியாண்டில் 331.61 இலட்சம் டன் சர்க்கரை உற்பத்தி ஆன நிலையில், 2019-இல் 268 இலட்சம் டன் மட்டுமே சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது.

சுமார் 40 விழுக்காடு சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 2011-12 ஆம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 23 இலட்சம் டன்னாக இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் வெறும் 8.50 இலட்சம் டன்னாக குறைந்துவிட்டது.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கு, சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 15,00 கோடி ரூபாயை வழங்காமல் கடந்த 4 ஆண்டுகளாக அலைக்கழிப்பதால் கரும்பு சாகுபடி செய்யும் எண்ணத்தையே விவசாயிகள் இழந்து வருகின்றனர்.

கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் தற்போது அளிக்கும் வேளாண் கடன் போதுமானதல்ல. ஏனெனில் கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 52,000 ரூபாய் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது.

10 ஏக்கர் சாகுபடி செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு 5 இலட்சம் ரூபாய் கடன் வழங்கினால்தான் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் வட்டி மானியம் கிடைக்கும். ஆனால், கூட்டுறவு வங்கிகள் தொடர்ந்து 15 ஆண்டுகளாக கரும்பு சாகுபடிக்கு அதிகபட்சக் கடன் தொகை ரூ.3 இலட்சம் மட்டுமே வழங்குகின்றன.

கரும்பு விவசாயி

அதேபோன்று, நெற்பயிர் சாகுபடிக்கும் ஏக்கர் ஒன்றிற்கு 29,800 என்றும், அதிகபட்ச கடன் 1,60,000 ரூபாய் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு ரிசர்வ் வங்கி வேளாண் கடன் அளவு அதிகபட்சமாக 3 இலட்சம் வரைதான் அளிக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளதால், கூட்டுறவு வங்கிகள் வழங்கும் 2 விழுக்காடு வட்டி மானியத்தை விவசாயிகள் பெற முடியவில்லை.

எனவே கரும்பு மற்றும் நெற் பயிருக்கு கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் வழங்கும் வேளாண் கடன் தொகையை 3 இலட்சத்திலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என வைகோ அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

What do you think?

‘என் கருத்தை கொண்டு சேர்த்தற்கு நன்றி’ ரஜினிகாந்த்

‘பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது’ தமிழக அரசின் அறிவிப்பு நிறுத்திவைப்பு!