பொறியியல் கல்வியில்,வேதியியல் கட்டாய பாடமாகத் தொடரவேண்டும்- வைகோ கோரிக்கை!

பொறியியல் கல்வியில்,வேதியியல், கட்டாயப் பாடமாகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார் .

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், “பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதிப் பாடங்களுள் ஒன்றாக, வேதியியல் இடம் பெற்று இருக்கின்றது. அண்மையில், இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு , கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு, மேனிலை வகுப்பில் வேதியியல் படித்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை; வேதியியல் மதிப்பு எண்களைக் கணக்கிட வேண்டியது இல்லை எனத் தெரிவித்து இருக்கின்றது.

மேலும் கணிதம், இயற்பியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டால் போதும் என்றும் கூறி இருக்கின்றது. அதேபோல, பொறியியல் கல்விக்கான பாடங்களை மாணவர்களின் விருப்பத் தேர்வுக்கு விட்டுவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு, கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

மாணவர்களைக் கடுமையாகப் பாதிப்பதுடன், மேல்நிலைப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வேதியியல் பயிற்றுவிக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வேலை வாய்ப்பினை இழக்கவும் வழிவகுத்து இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார் .

இந்த புதிய அறிவிப்பின்படி, மாணவர்கள், வேதியியலை விருப்பப் பாடமாகத் தேர்ந்து எடுப்பது கட்டாயம் அல்ல என்ற நிலை ஏற்பட்டு விடுகின்றது. இது, வேதியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பெருந்தடையாக அமைந்து விடும். அதன்பிறகு, வேதியியல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள, வேற்று நாட்டு அறிஞர்களின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்று அவர் கூறியுள்ளார்
.
மேலும் துணித்தொழில், வண்ணப் பூச்சுகள், பிளாஸ்டிக், உரங்கள், வேளாண்மை, தோல் பதனிடும் தொழில், சாயம் ஏற்றுதல், மருந்துகள், பெட்ரோல், மின்தகடுகள், சிமெண்ட், உணவு பதப்படுத்துதல், மண்ணியல் ஆய்வுகள், தரக் கட்டுப்பாடு ஆகிய முதன்மையான துறைகளில், வேதியியல் தொழில்நுட்ப அறிஞர்களின் பணி கட்டாயத் தேவை என்று குறிப்பிட்டுள்ள வைகோ வேதியியல் கட்டாயப் பாடம் என்பது, பொறியியல் கல்லூரிக்கான சேர்க்கைகளில் எந்தத் தடங்கலையும் ஏற்படுத்துவது இல்லை.

ஆனால், வேதியியல் விருப்பப் பாடம் இல்லை என்றால், அதனால், கலைக்கல்லூரிகளும், வேதியியல் துறையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று தெரிவித்துள்ளார். எனவே, இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்குழு வெளியிட்டு இருக்கின்ற அறிவிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, பொறியியல் கல்விக்கான சேர்க்கைகளுக்கு, கணிதம், இயற்பியல், வேதியியலை, கட்டாயத் தேர்வுப் பாடங்களாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்” என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார் .

What do you think?

‘வெட்டி கொலை செய்வோம்’ முதலமைச்சருக்கு பகிரங்க மிரட்டல்!

‘நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது’ ரசிகர்கள் அதிர்ச்சி!