“சமஸ்கிருதம் ஏனைய மொழிகளை அழித்துவிடும்” – வைகோ எச்சரிக்கை

சமஸ்கிருத மொழிச்சட்டம் ஏனைய மொழிகள் அனைத்தையும் அழித்துவிடும் என மாநிலங்களவையில் உரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

3 புதிய சமஸ்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்ட முன்வரைவு குறித்து மாநிலங்களையில் உரையாற்றிய வைகோ, இந்தி எதிர்ப்புக் களத்தில் கூர் தீட்டப்பட்டவன் என்ற முறையில், சமஸ்கிருத மொழிச் சட்டத்தை தான் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒழித்துக்கட்டுகின்ற ஒரே நோக்கத்துடன், இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். இது பெருங்கேடு விளைவிக்கின்ற அழிவுச் சட்டம் என்றும் நாடு முழுமையும் சமஸ்கிருதமயம் ஆக்கி, வேறு எந்த மொழிக்கும் இங்கே இடம் எல்லை என்ற நிலையை உருவாக்கும் முயற்சி என்றும் அவர் சாடியுள்ளார்.

இந்த பல்கலைக்கழகங்கள் தேர்வுகள் நடத்தலாம், தர மதிப்பு மற்றும் ஏனைய வழிகளில் பட்டயச் சான்றிதழ்கள் கொடுக்கலாம், பட்டங்கள் வழங்கலாம், ஏனைய சான்றிதழ்கள் கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய வைகோ, அந்த ஏனைய வழிமுறைகள் என்ன என கேள்வி எழுப்பிய அவர், அது குருகுலக் கல்வி என கூறினார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உஜ்ஜைன் நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் நாடு முழுவதும் குருகுலக் கல்வியை பரப்ப வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு மட்டும் மற்ற மொழிகளைக்காட்டிலும் 22 மடங்கு கூடுதலாக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் வைகோ தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மாநிலங்களவையில் இருக்கிற குஜராத்தி, மராட்டி, ஒடியா, பஞ்சாபி மொழி பேசுகிற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றும் அவர் வினவினார்.

சமஸ்கிருத மொழிச்சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டால் எதிர்காலத்தில் தென்னிந்திய மொழிகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மொழிகளையும் சமஸ்கிருதமும், இந்தியும் அழித்துவிடும் என வைகோ எச்சரித்தார்.

சமஸ்கிருத மொழியை எழுத பேசத் தெரியும் என்று கூறும் ஒரு மாணவன் நேரடியாக 12 வகுப்பில் சேர்ந்து கொள்ள முடியும், அந்த மாணவன் இயற்பியல், வேதியியல், வரலாறு என வேறு எந்த பாடங்களையும் படிக்க தேவையில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.

சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக 643 கோடி ரூபாய் செலவில் தேசிய சமஸ்கிருத கல்லூரியைத் தொடங்கிய மத்திய அரசு, செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் வெறும் 21 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.

மனுதர்மம், சாதிகளை உருவாக்கி மனிதர்களிடையே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவினையை உருவாக்கியவர்களுக்கிடையே, ஈடு இணையற்ற உலகப் பொதுமறையை தந்த எங்கள் ஆசான் திருவள்ளுவர், பிறபொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று கூறி அனைத்து உயிர்களையும் மதிக்கச் சொன்னவர் என்றும் வைகோ தெரிவித்தார்.

தமிழ் மொழியே உலக மொழிகளுக்கு தாய் மொழி எனக் கூறிய வைகோ, இந்த சட்டமசோதா ஏற்கப்பட்டு சட்டமானால் இந்திய ஒற்றுமை உடைந்து துண்டு துண்டாகிவிடும் எனவும் எச்சரித்தார். இதனால், இந்த சட்டத்தை எதிர்த்து அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தினார்.

What do you think?

மதிமுக 28-வது பொதுக்குழு ஒத்திவைப்பு!

தங்கம் விலை வீழ்ச்சி – மக்கள் மகிழ்ச்சி