பெண்களுக்கான சமத்துவத்தை பெறுகின்ற நிலையை உருவாக்க வேண்டும் – வைகோ

பெண்களுக்கான சமத்துவத்தையும் உரிமைகளையும் பெறுகின்ற நிலையை உருவாக்க மகளிர் நாளில் சூளுரைப்போம் என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

உலக மகளிர் நாளையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், 1889 ஆம் ஆண்டு கிளாரா ஜெட்கின் அனைத்துலக தொழிலாளர் சங்கத்தில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று உரிமைக்குரல் எழுப்பியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் தங்களுக்கு தொழிற்சங்க உரிமை வேண்டும், பணிபுரிகின்ற இடங்களில் சமநீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பெண்கள் அணிவகுத்து சென்றுதையும் அதில் வைகோ நினைவு கூர்ந்துள்ளார். மூன்றாண்டு கழித்து அந்த போராட்டம் வெற்றி பெற்றதை பாராட்டி, இனிமேல் இந்த நாள்தான் உலக மகளிர் நாள் என மார்ச் 8 ஆம் தேதியை கிளாரா ஜெட்கின் அறிவித்ததையும் வைகோ குறிப்பிட்டுள்ளார். 

சோவியத் புரட்சியின்போது ஆரோரா கப்பலில் பீரங்கிகள் வெடித்தபோது, 1917 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் நாள் பெட்ரோகாம் நகரில் எட்டாயிரம் பெண்கள் அணிவகுத்து, “உரிமை வேண்டும்; ஒடுக்குமுறையை எதிர்ப்போம்” என்று முழங்கியதை சுட்டிக்காட்டியுள்ள வைகோ, அவர்கள் உயர்த்திய உரிமை பதாகை, சோவியத் புரட்சிக்கு நுழைவாயில் ஆயிற்று என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின்னரே பெண்கள் வாக்குரிமை பெற்ற நிலையில், தமிழ் இனத்தின் வரலாற்றில் சங்க காலத்திலேயே பாடல்கள் புனைகின்ற இடத்தில் பெண்பாற் புலவர்கள் இருந்ததாக வைகோ பெருமிதமாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, வேந்தனின் அரசவையிலேயே கோவலன் கொலைக்கு நீதி கேட்டு எரிமலையாய் சீறிய கண்ணகியின் காப்பியத்தை இளங்கோவடிகள் சிலப்பதிகாரமாகப் படைத்தது, ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என திருவள்ளுவர் திருக்குறள் இயற்றியை எடுத்துக்காட்டாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.

20-ஆம் நூற்றாண்டில் பெண் உரிமைக்காக சங்கநாதம் செய்தவர் அறிவாசான் தந்தை பெரியார் என தெரிவித்துள்ள வைகோ, பெரியாரின் துணைவியார் நாகம்மாளும், சகோதரி கண்ணம்மாளும் மதுவை எதிர்த்துப் போராடியதையும், பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று செங்கல்பட்டு மாநாட்டில் தந்தை பெரியார் பிரகடனம் செய்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது “பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு” என்று சட்டம் இயற்றியதையும் வைகோ பெருமிதமாக கூறியுள்ளார். உலக மகளிர் நாளில் பெண்களுக்கான சமத்துவத்தையும், உரிமைகளையும் பெறுகின்ற  நிலையை உருவாக்க அனைவரும் சூளுரைக்க வேண்டும் என்றும் வைகோ அந்த வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

What do you think?

‘இயக்குனராக மாறிய விஜய், நடிகர்களாக மாறிய இயக்குனர்கள்’ மாஸ்டரில் மற்றுமொரு சுவாரசியம்!

‘இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்தியா’ மகளிர் தினத்தில் மகுடம் சூடிய ஆஸி., மகளிர் அணி!