அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு மையங்கள்; வைகோ வலியுறுத்தல்

அரசு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு மையங்கள் அமைத்துத்தர வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் நாளை (மார்ச் 2) தொடங்கி, 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதாக கூறியுள்ள வைகோ, மார்ச் 4-ம் தேதி தொடங்கும் மேல்நிலை முதலாமாண்டு தேர்வில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேர் எழுதுவதாகவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு 27-ம் தேதி நடைபெற இருப்பதாக கூறியுள்ள அவர், மாணவ கண்மணிகளை உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக இப்பொதுத்தேர்வுகள் விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலன்கருதி பள்ளிப் பொதுத்தேர்வுகளை அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைத்து நடத்திட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே சென்று பதற்றமும் அச்சமுமின்றி இயல்பாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள வைகோ, மாணவர்களின் முழுத்திறனையும் ஆற்றலையும் வெளிக்கொணரும் சாதனங்கள் தேர்வுகள் மட்டுமே அல்ல என கூறியுள்ளார்.

பயிலும் திறனை ஓரளவு தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புதான் தேர்வு என்றும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தேர்வு குறித்த எவ்வித அழுத்தத்தையும் தராமல், வாழ்வில் வெற்றிபெற ஓராயிரம் வழிகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையை குழந்தைகளிடம் எடுத்துக்கூற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகளோ, இதர அமைப்புகளோ, திருவிழா கொண்டாடுகிற குழுவினரோ ஒலிப்பெருக்கியை சத்தமாக இயக்கிடுவதை முற்றாகத் தவிர்த்திட வேண்டும் என வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டையும் சமூகத்தையும் நல்ல முறையில் வழிநடத்தப் போகும் வருங்கால தலைமுறையினரான மாணவச் செல்வங்களுக்கு தன் அன்பான வாழ்த்துகளையும் வைகோ தெரிவித்துள்ளார்.

What do you think?

மாதவரம் தீவிபத்து; 2வது நாளாக தொடரும் போராட்டம்

ஜடேஜாவின் ஏலியன்ஸ் ரக கேட்ச்!!!