“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலாரின் பிறந்தநாள் இன்று

உலகமே போற்றக்கூடிய அதிகமான சான்றோர்கள் இந்தியாவில்தான் பிறந்துள்ளனர், அதிலும் தென்னிந்தியாவிற்கு இதில் அதிக பங்கு உண்டு. அப்படியான ஒருவர்தான் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவரின்” பிறந்தநாள் இன்று.

1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இராமையாபிள்ளை, சின்னம்மையாருக்கு மகனாக பிறந்தார் இராமலிங்க அடிகளார். பிறந்த 6ம் மாதத்திலேயே தந்தையை இழந்தவர், பின்பு தனது தாய், சகோதரர்களுடன் சென்னையில் ஏழுகிணறு பகுதியில் வசித்தார். சிறு வயது முதலே சமூகத்தில் நிலவி வந்த சாதிய ஏற்றத்தாழ்வுகளை விரும்பாத அவர் அதற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார். சாதிய பாகுபாடுகளை சாடியதால் உயர்சாதி இந்துக்களின் எதிர்ப்பையும் சந்தித்தார். இறைவன் ஒருவனே என்பதில் உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்த வள்ளலார், எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த சமயத்திற்கு ”சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்” என்று பெயரிட்டார். அதன்படி கடவுள் ஒருவரே! அவர் ஒளிவடிவமானவர்! எல்லா உயிர்களிடத்தும் அன்பும், இரக்கமும் கொள்வீராக! என்று மக்களிடம் முழங்கினார்.

ஆரிய எதிர்ப்பு என்பது தமிழர்களின் வரலாற்றில் திருவள்ளூவர் காலம் தொட்டே இருந்து வந்தது, பிறகு ஆன்மீகத் தளத்தில் நின்று சித்தர்கள் போர் தொடுத்தனர். இருப்பினும் ஆரியம் தமிழோடு கலந்து தன்னை புதுப்பித்துக் கொண்டது. ஆனால் இதனை கடுமையாக எதிர்த்த வள்ளலார், தமிழ் மொழியை ஆயுதமாக்கி போராடினார். அவர் எப்போதும் தமிழை இயற்கையுண்மைச் சிறப்பியல் மொழி என்றும், உலகில் தோன்றிய எல்லா மொழிகளுக்கும் தந்தை மொழி என்றும் திருவருள் வளத்தால் கிடைத்த தென்மொழி என்றும் போற்றிப் புகழ்ந்திடுவார். இதனால் தமிழை ஏற்காத வைதீக மதத்தையும், வடமொழியையும் கடுமையாக புறக்கணித்தார். தமிழ் மொழியின் மீது கொண்ட பெருங்காதலால் இவர் நிறைய பாடல்களை பாடியுள்ளார், அப்படி அவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு ‘திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும் என்று கூறிய அவர், சக மனிதர்கள் பசியை போக்க மற்றவர்கள் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார். பசியோடு யாரும் இருக்க கூடாது, அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் வெளிப்பாடாக 1867 ஆம் ஆண்டு சிதம்பரம் அருகேயுள்ள வடலூரில் சத்திய தருமசாலையை நிறுவினார். இங்கு வருபவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது. இன்றளவும் தொடர்ந்து இயங்கிவரும் இந்த தருமசாலைக்கு அரசு குறைந்த விலையில் உணவு பொருட்களை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவை முற்றிலும் தவிர்த்து வந்த இவர், எந்த உயிரையும் கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தினார். சிறுதெய்வ வழிப்பாட்டை எதிர்த்த வள்ளலார், அவற்றின் பெயரால் பலியிடுவதையும் எதிர்த்தார்.

மூட பழக்க வழக்கங்களை சாடியது, சாதிய அடக்குமுறைக்கு எதிரான செயல்பாடுகள், அனைவரும் சமமே என்ற எண்ணம், சாதி, மதம், இனம், மொழி, முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தது, கல்வியே சமூகத்தின் முன்னேற்றதிற்கு பெரிதும் உதவும் என்ற இவரது முற்போக்கு சிந்தனைகளால் பெரிதும் கவரப்பட்டிருந்தார் பெரியார். இதனை அவரே அதிக இடங்களில் சுட்டிகாட்டியுள்ளார். இன்று தமிழர்களால் பெரிதும் மதிக்கப்படும் பெரியார், அவரது முன்னோடியாக வள்ளலாரையே கருதினார். வள்ளலாரின் கருத்தியல் மீதும், அவரது கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டிருந்த பெரியார் வள்ளலாரின் ‘திருவருட்பா’ நூலை வியந்து அடிக்கடி விளம்பரமும் செய்தார். இன்றைய காலக்கட்டத்திற்கு மட்டுமில்லாமல் உலகத்தின் இறுதிநாள் வரையிலும் மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது உயரிய முற்போக்கு சிந்தனைகளால் மட்டுமில்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டிய வள்ளலாரின் பிறந்தநாள் இன்று.

What do you think?

12 Cartoons Your Mom Shouldn’t Let You Watch When You Were Young

டி20 தரவரிசையில் ரோஹித் சர்மா, ராகுல் முன்னேற்றம்!